வருமானத்தை மறைத்த நவாஸ் கனி: விசாரணையை துவக்கியது வருமான வரித்துறை

சென்னை: வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை துவக்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.

கடந்த 2019 மற்றும் 2024ம் ஆண்டு தேர்தல்களில் நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, வருமானத்துக்கு அதிகமாக 23.58 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளார் என்பதால், வருமான வரித் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருமான வரித் துறை தரப்பில், ‘வருமான வரித் துறை வசமிருந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஏற்கனவே விசாரணையை துவக்கி உள்ளோம். நவாஸ்கனிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சில ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டது.

நவாஸ்கனி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து வழக்கு பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக் கோரிய வழக்கையும் அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Source link