காசிப்பூர்: உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடியாக பணம் பறித்த கும்பலை, வியாபாரிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காசிப்பூரில் உள்ள ஷாதியாபாத், சைத்பூர் பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படுகின்றன.
வெளிநாட்டு பொருட்களுக்கான சந்தை எனக் கூறப்படும் இந்த கடைகளில், சில நாட்களாக, வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி கும்பல் ஒன்று சோதனை நடத்தியது.
ஆவணங்கள் சரியில்லை, கணக்கு முறையாக இல்லை எனக் கூறி, பணத்தை இந்த கும்பல் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலியானவர்கள் என்பது கடைக்காரர்களுக்கு தெரிய வந்தது.
சமீபத்தில், ஷாதியாபாத் பகுதியில் உள்ள கடையில் இந்த கும்பல் சோதனை நடத்தியது. அவர்களிடம் பேச்சு கொடுத்தபடி கடை ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சோதனை நடத்தியவர்களை மடக்கி பிடித்த கடை ஊழியர்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
மூன்று பேர் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான சர்சு குமார் உள்ளிட்டோரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் தொடர்புள்ளவர்கள் குறித்து கைதானவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, தலைமறைவாக உள்ள சர்சு குமார் குப்தா, காசிப்பூர் சமாஜ்வாதி எம்.பி., அப்சால் அன்சாரியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
