ஜே.எஸ்.டபிள்யு., கார் மேலும் தாமதமாகலாம்
ஜே .எஸ்.டபிள்யு., நிறுவனம், அதன் முதல் காரை அறிமுகப்படுத்துவது மேலும் தள்ளிப்போகலாம் என தெரிவித்துள்ளது. ஸ்டீல் மற்றும் சிமென்ட் வணிகத்தில் ஈடுபட்டு வரும் ஜே.எஸ்.டபிள்யு., குழுமம், கிட்டத்தட்ட 27,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
ஹைபிரிட் மற்றும் மின்சார கார்கள் தயாரிப்பதற்காக, மஹாராஷ்டிராவில் தொழிற்சாலை அமைத்து வருகிறது. நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் முதல் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் இது தள்ளிப்போகலாம் என தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அரசு விதிகளின்படி, வெளிநாட்டு வினியோகஸ்தர்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும்.
எனவே, தாமதப்படுத்தாமல் உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வர்த்தத்துறை அமைச்சகத்துக்கு, ஜே.எஸ்.டபுள்யு., நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
ராணுவத்துடன் ‘அக்னிவஸ்த்ரா’ புரிந்துணர்வு
பா துகாப்பு துறையின் முக்கிய தேவைகளுக்காக, அதிநவீன கார்பன் இழைகள் மற்றும் உயர்தர கலப்பு பொருட்களை பெறுவதற்காக, இந்திய ராணுவம் ‘அக்னிவஸ்த்ரா’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, ராணுவத்தின் முக்கிய பயன்பாடுகளுக்கு தேவைப்படும் அதிநவீன கவசங்கள் மற்றும் கருவிகளுக்கான மூலப்பொருட்கள், சர்வதேச தரத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவஸ்த்ரா நிறுவனம், ஏற்கனவே ‘இஸ்ரோ’ மற்றும் டி.ஆர்.டி.ஓ., அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 என்.பி.எப்.சி., உரிமங்கள் திருப்பி ஒப்படைப்பு
‘டா டா மோட்டார்ஸ் பைனான்ஸ், பிரமல் என்டர்பிரைசஸ்’ ஆகிய நிறுவனங்கள் தங்களது துணை நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டதையடுத்து, வங்கி சாரா நிதி நிறுவன உரிமங்களை ரிசர்வ் வங்கியிடம் திருப்பி ஒப்படைத்துள்ளன. இவற்றுடன் சேர்த்து, மேலும் ஆறு நிறுவனங்கள் தங்களது உரிமங்களை திருப்பி வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொதுமக்களிடம் நிதி திரட்டாத மற்றும் 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவான சொத்து மதிப்பு கொண்ட குறிப்பிட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கியில் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கும் புதிய வரைவு விதிகளை ஆர்.பி.ஐ., முன்மொழிந்துள்ளது. இந்த புதிய திருத்தங்கள் குறித்த கருத்துகளை, மார்ச் 4ம் தேதிக்கு முன்னதாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
