மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் போர் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஈரானுக்கு ஆதரவாக யெமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இது ஹவுதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரில் நேரடியாக களம் இறங்கியதைக் குறிக்கிறது.
ஹவுதி இராணுவப் பேச்சாளர் யாஹ்யா சாரீ வெளியிட்ட அறிக்கையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள முக்கிய இராணுவ இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், இது ஈரான், லெபனான், ஈராக் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் இராணுவ நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணையை வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடை மறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் பதிவாகவில்லை என்றாலும், இந்தத் தாக்குதல் போரை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஈரான் சமாதான ஒப்பந்தத்திற்கு ஏங்குகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் ஈரான் தரப்பு இதை முற்றிலுமாக மறுத்து, டிரம்ப் நிர்வாகத்தை கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்து வருகிறது. மேலும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இராணுவ நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவோம் என்றும், அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகளை அழிப்போம் என்றும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் காஷ் பட்டேல் (Kash Patel) என்பவரின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு ஈரான் தொடர்புடைய ஹேக்கர் குழுவால் (Handala Hack Team) முடக்கப்பட்டு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு பட்டேலின் 300க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இவை பெரும்பாலும் 2010 முதல் 2019 வரையிலான தனிப்பட்ட, பயணம் மற்றும் வணிகத் தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க நீதித் துறை மற்றும் எஃப்.பி.ஐ. இந்த ஹேக்கை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், அரசு ரகசியத் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் ஈரான் போர் நடைபெறும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் முதல் பெரிய சைபர் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் தரப்பு இதன் மூலம் அமெரிக்காவை மனரீதியாக பலவீனப்படுத்தவும், உளவியல் போரை தீவிரப்படுத்தவும் முயற்சிப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில், ஹவுதி தாக்குதல், ஈரானின் ஏவுகணை மற்றும் சைபர் நடவடிக்கைகள், டிரம்ப் நிர்வாகத்தின் பேச்சு வார்த்தை முயற்சிகள் ஆகியவை சேர்ந்து மத்தியக் கிழக்கு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடித்து வரும் நிலையில், பிராந்தியம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. எரிசக்தி சந்தை, உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அமைதி ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
