வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து மாவட்டங்களையும் முன்னேற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ”வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட மாடலில் 2 டைடல் பார்க், 16 நியோ டைடல் பார்க் உருவானது. கணினித் துறையில் தமிழகம் உயர்ந்திட கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள். கடந்த 2016-21ல் அதிமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர்.

நமது திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பார்க்குகளை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.

இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைடல் பார்க்குகளும், திருவண்ணாமலை, ராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பார்க்கும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம். மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link