திருவனந்தபுரம்: கேரளாவில், வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் விடுத்த அழைப்பை ஏற்பதாக, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக காங்., தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளது. இங்குள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சியினரின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன், ”காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சியில் கட்டப்பட்ட அளவுக்கு கூட, 10 ஆண்டுகளில், மக்களுக்கு இடது ஜனநாயக முன்னணி அரசு வீடு கட்டித் தரவில்லை. மாநில வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனுடன் விவாதிக்க தயாராக உள்ளேன்” என்றார்.
இந்த சவாலை ஏற்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இது குறித்து, சமூக வ லைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘இடதுசாரி அரசின் செயல்பாடுகள், ‘ஏ பிளஸ்’ கிரேடில் உள்ளது. நாங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள சாதனைகள் அடிப்படையில், விவாதத்தை நடத்த எதிர்க்கட்சியினர் தயாரா-‘ என, குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன், இடதுசாரி அரசின், ‘ரிப்போர்ட் கார்டையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சதீஷன், ‘விவாதத்துக்கு தயாராக இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அவர் சொல்லும் இடம் மற்றும் நேரத்தில் விவாதத்தில் பங்கேற்க தயார்’ என்றார்.
