புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களில், சராசரியாக தினமும் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ராஜ்யசபாவில் நேற்று அளித்த பதில்: கடந்த 2021 – 2025 காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் 37,740 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில், 86 சதவீதத்துக்கும் அதிகமானோர் வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 12,380 பேர், சவுதி அரேபியாவில் 11,757 பேர் இறந்துள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரிவோரிடம் இருந்து துாதரகங்களுக்கு 2021 – 25 வரையிலான காலக்கட்டத்தில் 80,985 புகார்கள் பதிவாகியுள்ளன. இதிலும் அதிக புகார்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமன், சவுதி அரேபியா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடம் இருந்து பதிவாகியுள்ளன.
முக்கிய பிரச்னைகளாக, சரியான நேரத்தில் ஊதியம் வழங்காதது, பாஸ்போர்ட்டை கைப்பற்றி வைத்துள்ளது, கூடுதல் வேலை நேரத்துக்கு சம்பளம் இல்லாதது, விடுப்பு மறுப்பு மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்கள் ஆகியவை உள்ளன.
இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, துாதரக மற்றும் சட்ட உதவி வழங்கப்படுகிறது. இதற்காக பிற நாடு களுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
