ஜெர்மனியின் விஸ்மார் வளைகுடா பகுதியில் சுமார் 15,000 கிலோ எடையுடைய கூனல் முதுகு திமிங்கலம் சகதியில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் காணப்படுகிறது. இதனை பாதுகாப்பாக மீட்டு அட்லாண்டிக் கடல் நோக்கி திருப்பி விடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திமிங்கலம் முன்னதாக பால்டிக் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்தது. அப்போது அகழ்வாராய்ச்சி இயந்திரங்களின் உதவியுடன் கால்வாய் அமைத்து கடுமையான முயற்சிக்குப் பிறகு அதை மீட்டனர். ஆனால், மீட்கப்பட்ட பின்னரும் அது அட்லாண்டிக் கடலுக்குச் செல்லாமல், மீண்டும் விஸ்மார் வளைகுடாவில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.
ஹெர்ரிங் மீன்களின் கூட்டத்தை வேட்டையாட பின்தொடர்ந்தபோது, வழிதவறி இந்த குறுகிய நீர்ப்பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது திமிங்கலத்தை பாதுகாப்பாக மீட்டு, திறந்த கடலுக்கு திருப்பி விடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
