2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் என்பவரும், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்யபாமா என்பவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், இருவரும் தங்களுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த சூழலில், இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் மாதம் 6 தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் செப்டம்பர் 16ஆம் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்.17 ஆம் தேதி நடைபெறும் எனவும் வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (09-09-26) தொடங்கியுள்ள நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பலமுறை போட்டி ஏற்பட்டால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்றும் இடைத்தேர்தலுக்கு குதிரை பேரம் நடத்தியதே காரணம் என்பதால் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினிடம் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
