சென்னை: அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள் உள்நோக்குடன் செயல்படுகின்றனரா என்பதை, லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
தனியார் அறக்கட்டளை தொடர்பான வழக்கில், 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, சென்னை மாநகராட்சி கமிஷனர், இணை கமிஷனர் உள்ளிட்டோர் கடந்தாண்டு மேல்முறையீடு செய்தனர்.
அதாவது, ‘1,421 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என, மாநகராட்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், ‘கடந்த 2021ம் ஆண்டு அக்., 7ம் தேதி பிறப்பித்த உத்தரவு நகலை, மாநகராட்சி அலுவலகத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘இறுதியாக, வருவாய் துறை அதிகாரிகள், கடந்த ஆண்டு செப்டம்பர், நவம்பர் மாதங்களில் தான் எங்களுக்கு அளித்தனர். எனவே, காலதாமதம் ஏற்பட்டு விட்டது’ என, குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கோப்புகளை கையாளும் அதிகாரிகள் முற்றிலும் சோம்பேறித்தனமாக, எதுவும் செய்யாமல் இருந்துள்ளனர். மேல்முறையீடு செய்வதில், இதுபோல் காலதாமதமாக செயல்படக் கூடாது என, உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நீ ண்ட நாட்களுக்கு பின், மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்கும் இந்த மனுவை ஏற்க முடியாது.
மனுவை தள்ளுபடி செய்கிறோம். இதேபோல் ஏராளமான வழக்குகளில், நொண்டி சாக்குகளை கூறி, குறித்த நேரத்தில் மேல்முறையீடு செய்யாமல், நீண்ட தாமதத்துக்கு பின், அரசு அதிகாரிகள் அனுமதி கேட்கின்றனர்.
இந்த காலதாமதத்துக்கு, ஒன்று அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இருக்கலாம் அல்லது எதிர் தரப்பினரோடு கைகோர்த்து உடந்தையாகி இருக்கலாம்.
எனவே, உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து, அவர்களுக்கு மேல் உள்ள உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.
குறிப்பாக, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வாயிலாக விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த தீர்ப்பு நகலை, தமிழக தலைமைச் செயலருக்கு, உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
