புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, மேற்பனனக்காடு எரிச்சி என சுற்றுவட்டார கிராமங்களில் தைத்திருநாளை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்படுவது பிரபலமாக உள்ளது. 50 அடி உயர மரத்தில் கிரீஸ், எண்ணெய் பூசி மரத்தின் உச்சியில் வைக்கப்படும் பரிசுத் தொகையை எடுக்க நடக்கும் போட்டியில் இளைஞர்கள் ஏறுவதும் வழுக்கி கீழே வருவது பார்வையாளர்களை ரொம்பவே கவர்ந்த போட்டியாக உள்ளது. இந்த வழுக்கு மரங்களில் ஏற பல கிராமங்களிலும் இளைஞர்கள் அணி அமைத்து ஏறி வருகின்றனர். அதே போல பனங்குளம் கிங் பிசர் அணியினர் கடந்த சில ஆண்டுகளாக கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் மரத்தின் உச்சியை தொட்டு பரிசுகளையும், சுழற்கோப்பைகளையும் பெற்று தொடர்ந்து சாதித்து வருகின்றனர்.
இந்த அணிக்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பனங்குளம் கிங்பிசர் அணி வழுக்கு மரம் ஏறுவதாக அறிவித்தாலே ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்கின்றனர். அதே போல இந்த ஆண்டு சுமார் 10க்கும் மேற்பட்ட வழுக்கு மரங்களில் ஏறி பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வழுக்கு மரம் ஏறி பரிசுகள் பெற்ற பனங்குளம் கிங்பிசர் வழுக்கு மரம் ஏறும் இளைஞர்கள், பரிசுத் தொகையில் சிறிய தொகையை ஒதுக்கி பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க முடிவெடுத்தனர். அதன்படி தற்போது அடுத்த வாரம் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முதல்கட்டமாக சுமார் 250 மாணவர்களுக்கு தேர்வு எழுதும் அட்டை, பென்சில், ரம்பர், ஸ்கேல் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான பல உபகரணங்களை வழங்கினர்.
முதல்ட்டமாக பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பனங்குளம் கிழக்கு, கீரமங்கலம் திருவள்ளுவர் மன்றம், வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு, பரமன்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் சுமார் 250 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுககளுக்கான உபகரணங்களை வழங்கினர். மேலும், அங்கன்வாடி மையங்களில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க தலா ரூ.1000 பணமும் வழங்கி மகிழ்ந்தனர். இது குறித்து சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் போது, நாங்கள் படிக்கும் போது காலண்டர் அட்டையை தான் தேர்வு எழுத கொண்டு போவோம். அதற்காக முடிந்த காலண்டர் அட்டையை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்போம். ஆனால் தற்போது உங்கள் நலன் கருதி இப்படி அழகான அட்டைகளும் எழுது பொருட்களும் வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
கிங்பிசர் அணியினர் கூறும் போது, கடுமையாக உழைத்து வழுக்கு மரம் ஏறி பெற்ற பரிசுத் தொகையில் அரசுப் பள்ளிகளுக்கு ஏதாவது செய்ய நினைத்தோம் முதல்கட்டமாக தேர்வு எழுதும் உபகரணங்கள் வழங்கி இருக்கிறோம். அடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான அத்யாவசிய பொருட்களை அறிந்து வாங்கித் தர முடிவெடுத்துள்ளோம் என்றனர். இளைஞர்களின் இந்த செயலை பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்ளும் பாராட்டினர்.
