இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத்தேர்தலும், கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே போன்று தமிழ்நாட்டில் சட்டமன்றத்தேர்தலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 பி-இன் கீழ், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் தகுதியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் எந்தப் பிடித்தமும் செய்யக்கூடாது என்றும், விதிகளை மீறும் நிறுவன உரிமையாளர்கள் அபராதத்திற்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே வாக்காளர்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இன்றி சுதந்திரமாகத் தங்கள் வாக்குரிமையைச் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில், இந்த விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்களை அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் உடனடியாகப் பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் ப. பவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
