வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரம்; அரசியல் உள்நோக்கம் என்கிறார் சோனியா

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் தன் மீதான புகார், அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், வெளிப்புற அழுத்தங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, 79, தரப்பில் டில்லி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிறந்த சோனியா, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவை, 1968ல் காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, 1983ல் இந்திய குடியுரிமை பெற்றார்.

ஆனால், அதற்கு முன்பே 1980ல் டில்லி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அதன்பின் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலி ஆவணங்கள் இதனால், 1980ல் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, போலி ஆவணங்களை சோனியா அளித்திருக்கக்கூடும் எனவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, விகாஷ் திரிபாதி என்பவர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் 11ல் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து விகாஷ் திரிபாதி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, சோனியா மற்றும் டில்லி போலீசாருக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, சோனியா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் தரன்னும் ஷீமா, கனிஷ்கா சிங் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் வழக்கை விசாரிக்கும் நீதிபதி அமர்வில் நேற்று பதில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சோனியா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை; ஆதாரமற்றவை. இது, அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. சட்ட விதிகளை தவறாகப் பயன்படுத்தி உள்ளனர்.

தனிப்பட்ட உரிமை குடியுரிமை தொடர்பான விவகாரங்கள், மத்திய அரசின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டவை; இதேபோல் வாக்காளர் பட்டியல் தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட உரிமை என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்தப் புகார்களை ஏற்பதன் மூலம் குற்றவியல் நீதிமன்றங்கள் இந்த அதிகாரங்களைப் பறிக்க முடியாது. இது, அரசியலமைப்புச் சட்டத்தின் 329வது பிரிவை மீறும் செயல்.

தள்ளுபடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புகார், வெளிப்புற அழுத்தங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த சர்ச்சையை, தற்போது மீண்டும் எழுப்புகின்றனர்.

எந்தவொரு அடிப்படையான ஆதாரமோ, ஆவணமோ இன்றி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கற்பனையான மற்றும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும்படி கோரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல.

எனவே, இத்தகைய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Source link