தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத் துறை பணியாளர்கள் பங்கேற்ற ‘ஒரு ஓட்டு ஒரு மாற்றம், விரல் மை நமது கடமை’ என்ற வாக்காளர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கந்தசாமி தொடங்கி வைத்து வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் சைக்கிள் ஓட்டிச் சென்றார். இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஆசிரியர் காலனி சூரம்பட்டி நால்ரோடு அரசு தலைமை மருத்துவமனை பெருந்துறை சாலை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆட்சியர் அலுவலகத்திலேயே நிறைவடைந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நகரின் முக்கிய வீதியில் வழியாகத் திரளாகச் சைக்கிள் ஓட்டி சென்றது பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.
