கரூர்: ” திமுக வாஜ்பாயுடன் கூட்டணி வைத்ததே தவிர, இபிஎஸ் போன்று கட்சியை அடகு வைக்கவில்லை,” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டென்சன்
கரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் ஜாதிக்கலவரம் ,மதக்கலவரம், கும்பல் வன்முறை இல்லை. தமிழகம் அமைதியாக உள்ளது. இதைப் பார்த்து அதிமுக பாஜ டென்சனில் உள்ளது.இந்த அமைதியை கெடுக்க அவர்கள் பரப்பும் பொய் செய்தி புஷ்வாணம் ஆகிவிட்டது. அவர்களின் சதித்திட்டம் சந்தி சிரித்தது. அவர்களின் அவதூறு பிரசாரம் தவிடு பொய்யாகிவிட்டது.
உங்கள் சாய்ஸ்
இதற்கு காரணம் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. என்னுடன் பக்கபலமாக இருக்கும் நீங்கள் தான். நீங்கள் உள்ள வரை, இரட்டை இன்ஜின், டபுள் இன்ஜின் என யாரும் வர முடியாது. தேஜவுக்கு தூக்கத்தை கெடுத்து, இபிஎஸ்க்கு பதற்றத்தை கொடுத்த தேர்தல் அறிக்கை.ரூ.8 ஆயிரம் கூப்பனில் என்ன வாங்க வேண்டும் என்பது உங்களது சாய்ஸ்.
மக்கள் முடிவு
மக்களுக்கு வேதனைகளையும் சோதனைகளையும் தந்ததுதான் அதிமுக ஆட்சி. அதிமுகவுக்கு போட்டி போட்டு தமிழகத்தை வஞ்சிப்பது தான் பாஜ ஆட்சி. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற வைக்கவில்லை என்பதால் பழிவாங்கி கொண்டு இருக்கிறது பாஜ ஆட்சி. இப்படிப்பட்ட கூட்டணிக்கு பாடம் புகட்டும் நாள் தான் ஏப்.23. அடிமை அதிமுக, ஆணவ பாஜவுக்கு பதிலடி கொடுக்கும் நாள் தான் ஏப்.,23அன்றைக்கு அமித்ஷா அதிமுகவை மட்டுமல்ல, பாஜவை விரட்டியடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
காமெடி
தேர்தல் முடிவுகள் தெரிந்ததால் புலம்பதுவங்கி உள்ளார் இபிஎஸ். அதிலும் தன்னைத்தானே புலனாய்வு புலி என நினைத்துக் கொண்டு காமெடி செய்கிறார். கருணாநிதியும் வாஜ்பாய் புகைப்படத்தை காண்பித்து நீங்கள் கூட்டணி வைக்கவில்லையா என கேட்கிறார்.நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர இபிஎஸ் போன்று அடகு வைக்கவில்லை. நாங்கள் கூட்டணி வைத்த போது திமுக கட்சி கருணாநிதியிடம் இருந்தது. தற்போது அதிமுக அமித்ஷாவிடம் உள்ளது.நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து வாஜ்பாய் தலைமையிலான அரசின் கடிவாளத்தை கருணாநிதி வைத்து இருந்தார்.
ஆரூடம்
அதிமுக மட்டும் அல்ல. தேஜவில்இணைந்த ஊழல் கட்சிகளின் குடுமி பிடியும் அமித்ஷாவிடம் உள்ளது. நாங்கள் கூட்டணி வைத்தபோது வளர்ச்சிதிட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், இபிஎஸ் நீட்டிய இடங்களில் கையெழுத்து போட்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்ததுதான் மிச்சம். இந்த லட்சணத்தில் ஊருக்கு தெரிந்த செய்தியை காட்டி இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வருவதுபோன்று தான் ஒரு மங்குனி என நிரூபித்து கொண்டு உள்ளார்.பெயரிலாவது திராவிடம் உள்ள அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லு்ம இபிஎஸ் இது தான் நமது கடைசி தேர்தல் எனக்கூறியுள்ளார்.வழக்கமாக அமாவாசை பார்த்து ஆரூடம் சொல்லும் இபிஎஸ் இந்த முறை தவறான ஆரூடத்தை சொல்லி உள்ளார்.
அழிவுசக்தி
ஓபிஎஸ் முதல் சசிகலா வரை துரோகம் செய்து, முதுகில் குத்திய இபிஎஸ், இன்றைக்கு அதிமுகவை கைப்பற்றி பாஜவுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு ஏகத்தளமாக பேசுகிறார்.
தன்னிலைஉணராமல் ஆணவத்தில் ஆடினால் என்ன நிலைமை என இபிஎஸ் உணரவில்லை. அதிமுகவை நான் உடைக்க நினைத்தேன் என அபாண்டமாக பேசி உள்ளார்.அதிமுகவுக்கு வாய்த்த அழிவு சக்தியான இபிஎஸ். தலைமை பண்பும், அடக்கமும் இல்லாமல் சொந்த கட்சியனரை துரத்தவிட்டுவிட்டு. சந்தர்பவாதத்திற்காக கூட்டணி கட்சிகளுக்கு கூட துரோகம் செய்த இபிஎஸ் இப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
சரணாகதி
அதிமுகவில் இருந்து விலகி தாய்க்கழகமான திமுகவிற்கு வருவதை பார்த்து இப்படி பேசி உளளார். திமுகவில் இருந்து பிரிந்தது தான் அதிமுக. திராவிட இயக்கஉணர்வில் இருந்து விலகி தவறான பாதைக்கு இபிஎஸ் கொண்டு செல்லு்ம போது பலரும் விலகுகின்றனர்.நமது தாய்கழகத்திற்கு திரும்புகின்றனர். இதில் தவறு இல்லையே. வழிதவறிபோய், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்வது தான் ஏற்க முடியாது. இது பாஜவின் பாதமே சரணாகதி என்று இருக்கும் இபிஎஸ்க்கு புரியாது. தடம் மாறி கூட்டணி வைத்திருக்கும் இபிஎஸ் செய்த துரோகத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
