சென்னை ஏற்றுமதி பாதிப்பு மற்றும் விளைச்சல் அதிகரிப்பால், வாழை விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் அஜிதன் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து சவுதி, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏலக்கி, ஜி.9, செவ்வாழை ஆகிய பழங்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. போர் சூழலால் வாழைப்பழ ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாழைப்பழ விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகமாகி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளம், கர்நாடகாவுக்கு வாழைப்பழங்கள் செல்லும்.
ஆனால், அங்கு விளைந்தவையே போதுமானதாக இருப்பதால், இங்கிருந்து கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் வாழைப்பழ ரகங்களின் விலை கிட்டத்தட்ட 50 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆந்திராவில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் வாழை செய்யப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் வாழையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழத்தை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வருகிறோம். இதேபோல் வாழை மதிப்புக்கூட்டல் பொருட்களுக்கு தேவை அதிகமாக உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வாழை மாவு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்டும் இன்னும் அமைக்கவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் வாழை மாவு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்
மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழத்தை வழங்க வேண்டும்
ஏற்றுமதியால் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிப்பு
