வாஷிங்டன்:ஈரான் போரினால் எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு உள்ளிட்டவை

வாஷிங்டன்:ஈரான் போரினால் எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு உள்ளிட்டவை அமெரிக்காவிலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளன.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன. ஒரு மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. பரஸ்பர தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. போர் காரணமாக உலக கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கான போக்குவரத்தில் 20 சதவீதம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.

இதையடுத்து, வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை 110 முதல் 120 அமெரிக்க டாலர் வரை விலை உயர்ந்ததுடன், உலகம் முழுதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த விலை உயர்வானது அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.

ஈரானுடனான மோதல் ஒரு தொலைதுார புவிசார் அரசியல் நெருக்கடி என்பதிலிருந்து மாறி, சராசரி அமெரிக்க குடிமகனுக்கு நேரடி பொருளாதார சுமையாக உருவெடுத்துள்ளது. இம்மாத துவக்க நிலவரப்படி, எரிசக்தி சந்தை, தளவாடங்கள் மற்றும் பயண துறைகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டணங்களின் வாயிலாக இந்த நெருக்கடி உணரப்படுகிறது.

அமெரிக்காவில் பெட்ரோலின் சராசரி விலை கடந்த வெள்ளியன்று ஒரு கேலனுக்கு 4.09 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 2022 ஆகஸ்டுக்கு பின் இதுவே மிக உயர்ந்த அளவாகும். டீசல் விலை ஓராண்டுக்கு முன் ஒரு கேலனுக்கு 3.64 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இதுவும் கடந்த வெள்ளியன்று 5.53 டாலராக கடுமையாக உயர்ந்துள்ளது.

விவசாயம், கட்டுமானம் மற்றும் போக்குவரத்து மட்டுமின்றி மற்ற தொழில்களிலும் டீசல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இ – காமர்ஸ்’ நிறுவனமான ‘அமேசான்’, வரும் 17ம் தேதி முதல், விலைப்பட்டியலில் எரிபொருள் கூடுதல் கட்டணமாக 3.50 சதவீதத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அஞ்சல் துறையும் அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகளை கையாள்வதற்காக பார்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் மெயில் டெலிவரிகளுக்கு தற்காலிகமாக 8 சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதிக்க அனுமதி கோரியுள்ளது. இது அனுமதிக்கப்பட்டால், இந்த விலை உயர்வு, வரும் 26ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன., 17ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது-.

போக்குவரத்து செலவுகள் உயர துவங்கினால் அது மற்ற பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Source link