வாஷிங்டன்;’மிகப் பெரிய அளவில் ஏவுகணை மழையை சந்திப்பதை தவிர்க்க, ஈரானுக்கு விடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைய, 48 மணி நேரமே உள்ளது’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த போர், 36வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போரை நிறுத்திக் கொள்ள, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 15 அம்ச அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்தார்.
மேலும், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விட வேண்டும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்காக விடுக்கப்பட்ட காலக்கெடுவை, 10 நாட்களாக நீடித்தார். அதன்படி, வரும், 6ம் தேதியுடன் இந்தக் காலக்கெடு முடிவடைகிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் டிரம்ப் கூறியுள்ளதாவது:
போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் செய்ய அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க, ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் தந்திருந்தேன். அந்தக் காலக்கெடு முடிவடைய, 48 மணி நேரமே உள்ளது.
மிகப் பெரிய அளவில் ஏவுகணை மழையை சந்திப்பதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
