வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 262 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டு உள்ளனர்.
அமெரிக்காவில் துறைமுக நகரான சியாட்டில் அருகே சவுத் லேக் யூனியன் உள்ளது. இங்குள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலையில், ஆந்திர மாநிலத்தின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டுலா, ௨௩, என்ற இளம்பெண் முதுகலை பட்டம் படித்து வந்தார்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் படிப்பை முடித்து பட்டம் பெற இருந்த இவர், ஜன., 23ம் தேதி இரவு சாலையை கடந்தபோது, அதிவேகமாக வந்த சியாட்டில் போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. இதில் 100 அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டதில் ஜானவி கண்டுலா படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் உடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், போலீஸ் அதிகாரிகள் இறந்த மாணவியை கிண்டல் செய்யும் வகையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அறிந்த மனித உரிமை அமைப்புகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்திய தூதரக அதிகாரிகளும் தலையிட்டனர். இதனையடுத்து ரோந்து வாகனத்தில் இருந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். வாகனத்தை ஓட்டியவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் 5 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, போலீஸ் அதிகாரி மீதும், நகர நிர்வாகம் மீதும் 2024 ல் 110 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சியாட்டில் நகர அதிகாரிகள் ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டு உள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. காப்பீடு மூலம் இழப்பீடு தொகை செலுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சியாட்டில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘ ஜானவி கண்டுலா மரணம் மனதை நொறுங்கச் செய்கிறது. இந்த இழப்பீடு மூலம் அவரது குடும்பத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்,’ எனத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஜானவி கண்டுலா குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கறிஞர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
