வாஷிங்டன்: ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஒரு மாத கால போர் நிறுத்தம் உட்பட, 15 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி தாக்குதலை துவக்கின. இது உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து, போரை நிறுத்துவதற்கு வாய்ப்பாக, 5 நாட்கள் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
இருப்பினும், 26வது நாளாக நேற்றும் இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் மத்தியஸ்தம் செய்வதாக நம் அண்டை நாடான பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்நிலையில், ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, ஒரு மாத போர் நிறுத்தம் உள்ளிட்ட 15 அம்சம் கொண்ட அமைதி திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இது பாகிஸ்தான் மூலமாக, ஈரானுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் அமைதி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* ஈரான் தன் அணுசக்தி கட்டமைப்புகளை கலைக்க வேண்டும். யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோ ஆகிய அணுசக்தி மையங்களை மூட வேண்டும்* ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையற்ற பாதையாக மாற்ற வேண்டும்* ஹெஸ்பொல்லா மற்றும் ஹவுதி போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கி வரும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை ஈரான் நிறுத்த வேண்டும்* ஈரானின் நீண்ட துார ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
ஈரான் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அந்நாடு மீது விதிக்கப்பட்ட அணுசக்தி தொடர்பான சர்வதேச பொருளாதார தடைகள் நீக்கப்படும். சர்வதேச அணுசக்தி மையத்தின் கண்காணிப்பில், ஈரானின் உள்நாட்டு தேவைக்கான ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும். மேலும், ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஒத்துழைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் நிபந்தனைகள்!
ஈரான் தரப்பில் இருந்து இதுவரை அமைதி பேச்சுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்திற்கு பதிலாக ஈரான் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் விபரம்:
* மேற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் அகற்றப்பட வேண்டும். இதுவே, பிராந்தியத்தில நிரந்தர அமைதியை ஏற்படுத்தும்
* ஈரானின் உட்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் நிதி இழப்பீடு வழங்க வேண்டும்
* ஈரானின் பொருளாதாரத்துக்கு பலம் சேர்க்க, உலக எண்ணெய் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தாண்டி செல்லும் கப்பல்களுக்கு, எகிப்து சூயஸ் கால்வாயில் சுங்கவரி வசூலிப்பதை போன்று, சுங்கவரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்
* லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்
* அணுசக்தி திட்டம் குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும். ஆனாலும், ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா விதிக்கும் எந்தவித நிபந்தனைகளையும் ஏற்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
