வாஷிங்டன்: “ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு இல்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் துல்லியமானது” என பென்டகன் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலா் பீட் ஹெக்செத் கூறியதாவது: வளைகுடா நட்பு நாடுகளைத் தாக்குவதன் மூலம் பதற்றத்தை அதிகரிப்பதை ஈரான் தவிர்க்க வேண்டும். சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஈரானுக்கு உள்ளது. இனிவரும் காலங்களில், அது அண்டை நாடுகளையோ, அரபு நாடுகளையோ குறிவைத்து, தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடாது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு இல்லை.
துல்லியமானது
ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் துல்லியமானது. எங்களது நோக்கங்கள் மாறாமல் இருக்கிறது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களை அழிப்பது, மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுப்பதற்காகக் குறிவைப்பது, அதன் கடற்படைத் திறன்களைச் சிதைப்பது, மற்றும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் ஆகும்.
ஈரான் பல தசாப்தங்களாக அரசு வளங்களைத் தனது மக்களுக்கு வழங்காமல், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட வசதிகளுக்காக பயன்படுத்துகிறது. ஆனால், உலகில் வேறு எந்த ராணுவமும் செய்ய முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களை வேட்டையாடுகிறோம். ராணுவ நடவடிக்கைகளின் போது நடத்தப்பட்ட தாக்குதலின் சேதங்கள் பேசுகின்றன.
சரியான பாதையில்…
போர் எங்கள் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. ஈரானின் 11 நீர்மூழ்கிக் கப்பல்கள் காணாமல் போய்விட்டன. ஈரானுக்குள் அமெரிக்கா மற்றுமொரு பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்தும். மீண்டும் ஒருமுறை எங்களின் மிகவும் தீவிரமான தாக்குதல் நடத்தும் நாள். ஈரானில் அமெரிக்காவின் இலக்குகள் திட்டமிட்டபடி முன்னேறி வருகிறது, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
கூடுதல் நிதி
மோதலுக்கான செலவுகளை ஈடுகட்ட, பென்டகன் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான கூடுதல் நிதியைக் கோரியுள்ளது. 200 பில்லியன் டாலரைப் பொறுத்தவரை, அந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்று நான் நினைக்கிறேன். கெட்டவர்களை ஒழிப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது. இவ்வாறு பீட் ஹெக்செத் கூறினார்.
