வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலை தளத்தில், 8 நிமிட உரையை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை அவர், ‘எதிர்காலத்துக்கான ஓர் உன்னத பணி’ என வர்ணித்துள்ளார்.
டிரம்ப் பேசியிருப்பதாவது:
ஈரானிய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களில் இருந்து, அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். மிகவும் கடுமையான, கொடூரமான குழுவினரான ஈரானிய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள், அமெரிக்காவையும், எங்கள் படைகளையும், வெளிநாடுகளில் உள்ள எங்கள் தளங்கள் மற்றும் உலகம் முழுதும் உள்ள எங்கள் நட்பு நாடுகளையும், நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
அப்பாவி மக்கள் கொலை
கடந்த 47 ஆண்டுகளாக ஈரானிய ஆட்சியாளர்கள், ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என்ற முழக்கத்துடன், அமெரிக்கா மற்றும் பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்களை படுகொலை செய்து வருகின்றனர்.
கடந்த, 1983ல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், 241 அமெரிக்க வீரர்களை கொன்ற குண்டு வெடிப்பு முதல், 2000ல் யு.எஸ்.எ-ஸ்., கோல் என்ற போர்க் கப்பல் மீதான தாக்குதல் வரை, ஈரானுக்கு தொடர்புள்ளது-.
லெபனான் முதல் ஏமன் வரையிலும், சிரியா முதல் ஈராக் வரையிலும், பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்கி, இந்த உலகையே ரத்த களறியாக்கி வருகிறது ஈரான்.
கடந்த, 2023 அக்டோபர் 7ல், இஸ்ரேல் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பு, ஈரானின் கைக்கூலிதான். இத்தாக்குதலில், 46 அமெரிக்கர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், கொல்லப்பட்டனர்.
உலகிலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான நாடு ஈரான். சமீபத்தில் கூட, அந்நாட்டில் போராட்டம் நடத்திய, தன் சொந்த மக்களில், ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இந்த ஆட்சியிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதுதான், என் கொள்கை. இதற்காகவே கடந்தாண்டு அவர்களின் அணுசக்தி திட்டத்தை, ‘ஆப்பரேஷன் மிட்நைட் ஹேமர்’ வாயிலாக அழித்தோம்.
அதன் பின் அவர்களை எச்சரித்ததுடன், ஒரு ஒப்பந்தத்திற்கு வருமாறும் கேட்டுக் கொண்டோம். நாங்கள் வழங்கும் வாய்ப்புகளை, பல ஆண்டுகளாக ஈரான் நிராகரித்து வருகிறது.
தற்போது அவர்கள், மீண்டும் அணுசக்தி திட்டங்களை உருவாக்க முயன்று வருகின்றனர். ஐரோப்பாவையும், விரைவில் அமெரிக்காவையும் தாக்கக்கூடிய நீண்ட துார ஏவுகணைகளை தயாரித்து வருகின்றனர்.
இக்காரணங்களுக்காகவே, அமெரிக்க ராணுவம், மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இனி பாருங்கள்..
.
ஈரானின் ஏவுகணை தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்படும். அவர்களின் கடற்படை அழிக்கப்படும். அந்த பிராந்தியத்தில் உள்ள அவர்களின் பயங்கரவாத கைக்கூலிகளால் இனி உலகை அச்சுறுத்த முடியாது என்பதை உறுதி செய்வோம்.
ஈரான் ராணுவம் மற்றும் போலீசாருக்கு நான் சொல்வது என்னவென்றால், இன்றிரவு நீங்கள் உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, முழுமையான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள்; இல்லையெனில், நீங்கள் நிச்சயமாக மரணத்தை சந்திப்பீர்கள்.
இறுதியாக, பெருமைமிகு ஈரானிய மக்களே… உங்கள் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது. தற்போது வெளியே குண்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன. வெளியே வராதீர்கள்; வீட்டுக்குள்ளேயே இருங்கள். நாங்கள் எங்கள் பணியை முடித்ததும், உங்கள் அரசை கைப்பற்றுங்கள். அது உங்களுக்கு சொந்தமானது. தலைமுறைகளாக கிடைக்காத இந்த வாய்ப்பு, உங்களுக்கு கிடைத்துள்ளது-.
இவ்வாறு பேசினார்.
