வாஷிங்டன்: உலகளாவிய இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை, அதிபர் டிரம்ப் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். ”அந்த தீர்ப்பு துரதிருஷ்டவசமானது; தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை பார்த்து மிகுந்த வெட்கப்படுகிறேன்,” என டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பார்லி.,யின் ஒப்புதல் பெறாமால், அவசர அதிகாரச் சட்டத்தின்படி, அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். ‘இந்த பரஸ்பர வரிகள் சட்டவிரோதமானவை’ என அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்த தீர்ப்பு, டிரம்பின் பொருளாதாரக் கொள்கை திட்டங்களில் முக்கியமானதாக கருதப்பட்ட சுங்க வரி நடவடிக்கைக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தனது உத்தரவை ரத்து செய்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், ”நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் சில உறுப்பினர்களின் செயல்பாடு பார்த்து வெட்கப்படுகிறேன். இது அமெரிக்க நலனுக்கு எதிரானது வெளிநாட்டு சக்திகளின் விருப்பத்துக்கு நீதிமன்றம் வளைந்து கொடுத்து, வரி விதிப்பை ரத்து செய்துள்ளது.
இது துரதிருஷ்டவசமானது. இதற்கெல்லாம் நான் சிறிதும் அசைந்து கொடுக்கமாட்டேன். திட்டமிட்டபடி எனது நடவடிக்கை தொடரும்,” என தெரிவித்துள்ளார். டிரம்பின் விரிவான கொள்கை திட்டங்களில் உச்ச நீதிமன்றம் நேரடியாக எடுத்துக் கொண்ட முதல் முக்கிய வழக்கு இது. அவரது முதல் ஆட்சிக் காலத்தில் மூன்று பழமைவாத நீதி பதிகளை நியமித்து, உச்ச நீதிமன்றத்தின் அதிகார அமைப்பை அவர் மாற்றியிருந்தாலும், அதே நீதிமன்றத்திலிருந்தே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது, அவருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
