வாஷிங்டன்: ‘மோதல்களை நிறுத்திக் கொள்வ து தொடர்பாக ஈரானுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான முடிவு எடுக்க ஈரானுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்த நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
தாக்குதல்
அணுசக்தி ஒப்பந்தம் செய்வது தொடர்பான பிரச்னையில், மேற்காசிய நாடான ஈரான் மீது, இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த பிப்., 28ல் துவங்கிய போர், 24வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போரால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பல நாடுகளில், குறிப்பாக ஆசிய நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் செய்வது தொடர்பாக ஈரான் மீது கடந்தாண்டு ஜூனில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. அப்போது, 12 நாட்களுக்கு தாக்குதல் நீடித்தது. தற்போதைய தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தக்கட்ட முடிவு
‘ஈரானில் எங்களுடைய இலக்குகளை முடித்துவிட்டோம்; அதனால் எந்த நேரத்திலும் போர் முடிவுக்கு வரும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த சில நாட்களாக கூறி வந்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுவதற்கு, அமெரிக்க அதிபர் விதித்த, 48 மணி நேர கெடு, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு ஒன்றில் டிரம்ப் கூறியுள்ளதாவது:
மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களை நிறுத்துவது தொடர்பாக, ஈரான் அரசுடன் கடந்த இரண்டு நாட்களாக பேசி வருகிறோம். மிகவும் விரிவான, ஆழமான இந்த பேச்சு ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது; பேச்சு இந்த வாரமும் தொடரும்.
அதனால், ஈரானின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை, அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தும்படி, ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பேச்சில் ஏற்படும் வெற்றியைப் பொறுத்து, அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
