வாஷிங்டன்: வங்கதேச பொருட்களுக்கான இறக்குமதி வரியை 37 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிபர் டிரம்ப் குறைத்துள்ளார்.
வங்கதேச பொதுத் தேர்தலுக்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில், அமெரிக்கா வங்கதேசப் பொருட்களுக்கான வரியை குறைத்தது. இந்த ஒப்பந்தம் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசம், அமெரிக்கா இடையே பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நீடித்தன. வங்கதேச பொருட்களுக்கான இறக்குமதி வரியை 37 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அமெரிக்கா குறைக்கும். பரஸ்பர வரியைக் குறைப்பது நமது ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் நன்மையை அளிக்கும்.
இரு தரப்பினரும் அறிவிப்புகள் வெளியிட்டவுடன் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். புதிய ஒப்பந்தத்தின் மூலம், வங்கதேசத்தில் இருந்து வரும் சில குறிப்பிட்ட ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத பரஸ்பர வரி விகிதத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் ஒரு வழிமுறையை உருவாக்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இனிமேல், ஒரு குறிப்பிட்ட அளவிலான இறக்குமதிகள் முன்னுரிமையை வங்கதேசம் பெற முடியும்.
