வாஷிங்டன்: 'ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், முக்கிய மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தகர்ப்போம்'

வாஷிங்டன்: ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், முக்கிய மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தகர்ப்போம்’ என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதே சமயம், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பதிலடி மிக வலிமையாக இருக்கும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம், 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சர்வதேச எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியையும் ஈரான் மூடியதால், உலகெங்கும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் குறித்து முன்னுக்குபின் முரணான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். ஈரான் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என சமீபத்தில் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு முரணாக 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய போர்க்கப்பலை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். அடுத்தபடியாக, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை தளர்த்துவதாகவும், இதனால், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நீங்கி, விலையும் குறையும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் ஈரான் திறக்க வேண்டும். இல்லையெனில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மூலமாக்குவோம் என சமூகவலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதல் ஈரானின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து துவங்கும் என தெரிவித்தார்.

மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி, எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என பதிலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

‘டிரம்ப் எச்சரிக்கையும், ஈரானின் பதிலடியும்’ அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த 48 மணி நேர கெடுவை தொடர்ந்து, அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்களை தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இது ஆபத்தான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மேற்காசிய நாடுகள் குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்களின் குடிநீர் தேவையில் 70 முதல் 90 சதவீதத்தை இந்த நன்னீராக்கும் மையத்தையே நம்பியுள்ளன. இம்மையங்கள் தாக்கப்பட்டால், கோடிக்கணக்கான மக்கள் குடிநீரின்றி தவிக்கும் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிக்கு தள்ளப்படுவர். நன்னீராக்கும் மையங்கள் வெறும் குடிநீர் ஆதாரம் மட்டுமல்ல, அந்நாடுகளின் தொழிற்சாலைகள் மற்றும் எரிசக்தி உற்பத்திக்கும் அவசியமானவை என கூறப்படுகிறது. இவை முடங்கினால் அப்பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பிக்கும். அமெரிக்காவை நேரடியாக தாக்காமல், பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளை தாக்குவோம் என கூறி, அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் முயல்கிறது. ஏற்கனவே, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தற்போது நன்னீராக்கும் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகள் குறி வைக்கப்பட்டால், அது உலகளாவிய வர்த்தகத்தை மேலும் சீர்குலைத்து, அனைத்து நாடுகளிலும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link