வாஷிங்டன்: ஹாலிவுட் பட சாகசங்களை மிஞ்சும் வகையில் ஈரானில் சிக்கிய அமெரிக்க விமானப்படை வீரரை அந்நாடு

வாஷிங்டன்: ஹாலிவுட் பட சாகசங்களை மிஞ்சும் வகையில் ஈரானில் சிக்கிய அமெரிக்க விமானப்படை வீரரை அந்நாடு மீட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப்படைகள் கடந்த பிப்.,28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் எப்15 இ போர் விமானத்தை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தின. உடனடியாக அந்த விமானத்தில் இருந்த இரண்டு வீரர்களும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.

இதில் விமானத்தை ஓட்டியவர் உடனடியாக மீட்கப்பட்டார். மற்றொரு வீரர் குறித்து தகவல் ஏதும் இல்லை. அந்த வீரரை பிடிக்கும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டது. அவரை பிடித்துக் கொடுப்பவருக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்தது. ஈரான் ராணுவத்தினரும், தீவிர தேடுதலில் இறங்கினர்.

பாராசூட்டில் சென்று மலைப்பகுதியில் தரை இறங்கிய அந்த வீரரை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதில் அமெரிக்காவும் தீவிரம் காட்டியது. அந்த வீரர், தன் இருப்பிடத்தை அமெரிக்க படைகளுக்கு வெளிப்படுத்தும் கருவியை தன்னிடம் வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரை பத்திரமாக மீட்க நூற்றுக்கணக்கான படை வீரர்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடிக் கொண்டிருந்தன.

உறுதி

தன்னை ஈரான் படையினரும், பொதுமக்களும் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக, அந்த வீரர் மலைப்பகுதியில் கைத் துப்பாக்கி உடன் மலையில் பதுங்கியிருந்தார். இதற்கிடையே, ஈரான் மக்கள், ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்துடன், ‘குறிப்பிட்ட அந்த வீரர் மீட்கப்பட்டு விட்டார்’ என்ற தகவலை சிஐஏ பரப்பி விட்டது.

இதற்குள் ஈரானுக்குள் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் தரை இறங்கிய அமெரிக்கப்படைகள், அந்த வீரரை பாதுகாப்பாக மீட்டுச் சென்றன. வீரரை, ஈரானிய படைகள் நெருக்காமல் இருக்க அந்த இடத்தைச் சுற்றிலும், சுற்று வட்டாரப்பகுதி முழுவதும் காவல் அரண் போல் அமைத்து அமைத்து அமெரிக்க படையினர், தாக்குதல் நடத்தினர். இதனால் குறிப்பிட்ட அந்த இடத்தை ஈரான் படையினர் நெருங்க முடியவில்லை.

முன்னெச்சரிக்கையாக, தகவல் தொடர்பு கோபுரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. எதிரி நாட்டுக்குள் அதிரடியாக இறங்கி, சிக்கிய வீரரை பாதுகாப்பாக மீட்டுச்சென்றது ஹாலிவுட் படங்களில் மட்டுமே காணக்கூடிய சாகசம். அதையும் மிஞ்சும் வகையில், 24 மணி நேரத்துக்கும் மேலாக தன்னந்தனியாக சிக்கியிருந்த வீரரை அமெரிக்க படை மீட்டுள்ளது.

அழிப்பு

மீட்புப்பணியின் போது வீரர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஈரானில் சிக்கிக் கொண்டன. உடனடியாக மாற்று விமானங்களை பயன்படுத்தி வீரர்கள் மீட்கப்பட்டனர். அங்கு சிக்கிய விமானம், ஈரான் வீரர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக அமெரிக்க படையினரால் குண்டு வீசி அழிக்கப்பட்டது.

எனினும், அந்த விமானங்களை தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியதாகவும், அமெரிக்க படையினரே அழித்ததாக கூறுவது பொய் என்றும் ஈரான் ராணுவம் கூறி வருகிறது.

டிரம்ப் மகிழ்ச்சி

அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க வீரரை பாதுகாப்பாக மீட்டுள்ளோம். அமெரிக்க ராணுவ வரலாற்றில் இது சவாலான மற்றும் தீவிரமான தேடுதல் வேட்டையாக இருந்தது. மீட்கப்பட்ட வீரர் நலமுடன் உள்ளார். அவரை பிடிப்பதற்கு எதிரிகள் முயன்ற போதும், அமெரிக்க ராணுவம் அவரை 24 மணி நேரமும் கண்காணித்துவந்தது. மிகவும் சரியான திட்டமிடல் மூலம் வீரர் மீட்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link