விசாகப்பட்டினம்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்மூழ்கி

விசாகப்பட்டினம்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்மூழ்கி கப்பலை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் அரிதாமன் நீர்மூழ்கி கப்பலை, இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஐஎன்எஸ் அரிதாமன் கப்பலின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது; அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்திய கடற்படை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நமது கடற்கரைகளைப் பாதுகாப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. மாறாக, தேசிய நலன்களுடன் தொடர்புடைய முக்கியமான கடல் வழித்தடங்கள் , கடல் சந்திப்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,’ எனக் கூறினார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் 3வது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். சுமார், 7,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், சுமார் 3,500 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது. ஏற்கனவே இந்திய கடற்படையில் இருக்கும் கப்பல்களைப் போல அல்லாமல், ஐஎன்எஸ் அரிதாமனில், ஒரே சமயத்தில் 8 ஏவுகணைகளை செலுத்தும் அமைப்புகள் உள்ளன.

அதிநவீன வசதிகளைக் கொண்ட ஐஎன்எஸ் அரிதாமன், விசாகப்பட்டினம் அருகே உள்ள ‘ப்ரோஜெக்ட் வர்ஷா’ என்ற கடற்படை தளத்தில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம், எதிரிகளின் கடல்சார் அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ளும் இந்திய கடற்படையின் திறன் மேலும் வலுவடைந்துள்ளது.

Source link