“விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்” – பரபரப்பைக் கிளப்பிய திருமாவளவன்!

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 9 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, மார்ச் 16 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த மார்ச் 23 அன்று நிறைவு பெற்றது. தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நாளே புதுசேரியில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதால் கட்சிகளுக்குக் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த போதிய காலம் கிடைக்காமல் போனது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்தன. பின்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டியது. அதன்படி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் மற்றும் விசிக ஒரு இடத்திலும் போட்டியிடக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி கூட்டணி சார்பாக உழவர்கரை தொகுதியில் விசிக போட்டியிட உள்ளது. இருப்பினும்,  ஊசுடு, நெட்டப்பாக்காம், ஏனாம் ஆகிய 3 தொகுதிகளில் விசிக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். அதன்படி இந்த 3 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வேட்புமனுவை வாபஸ் வாங்கும் தேதி மார்ச் 26ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் செல்வபுஷ்பலதாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (05-04-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டுக்கான பேச்சு வார்த்தை கால தாமதமானதால் நாங்கள் தொடக்கத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்தோம். நான்கு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை அறிவித்தோம். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை மற்றும் ஏனாம் ஆகிய நான்கு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாங்கள் அறிவித்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு காணப்பட்டது.

அதன்படி எங்களுக்கு உழவர்கரை என்ற ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் 13 இடங்களில் திமுக போட்டியிடுவது என்றும் ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் முடிந்த நிலையில் நாங்கள் போட்டியிடுகிற உழவர்கரை தொகுதியிலும், ஊசுடு, நெட்டப்பாக்கம் ஏனாம் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. அந்த தொகுதிகளில் அவர்கள் வேட்புமணுக்களை திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து பல தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் உழவர்கரையில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவது, காங்கிரஸ் மற்றும் திமுகவை கூட்டணியை சார்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உழைப்பது, பாடுபடுவது, வாக்கு சேகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் ஆகிய தொகுதிகளில் வேட்புமனுக்களை திரும்ப பெறாவிட்டாலும் கூட நாங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதில்லை.

மாறாக காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது, அவர்களின் வெற்றிக்காக வாக்கு சேகரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறோம். அதேபோல் திமுக வேட்பாளர்களுக்கு அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களும் திமுக வேட்பாளர்களுக்காக, உழைக்க வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைக்கு நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் செல்வ புஷ்பலதா, போட்டியிடுகிற உழவர்கரை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறேன். இன்று முதல் எனது சுற்றுப்பயணம் 14ஆம் தேதி வரையில் தொடர்ந்து தமிழ்நாடு எங்கிலும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்” என்று கூறினார். 

Source link