விசில் அடித்துக் கொண்டு வருபவர்களுக்கு வாக்களிக்க கூடாது.. விஜய் பாஜகவுக்கு செயல்படுகிறார்.. திருமா நெத்தியடி! – thirumavalavan campaign against vijay, saying people who blow whistles should not be voted for

பாஜகவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகவும் தவெக தலைவர் விஜய் மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். விசில் அடித்துக் கொண்டு வருபவர்களுக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று திருமாவளவன் கூறி உள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமாவளவன் பிரச்சாரம்

இந்த சூழலில், சென்னை திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தரராஜனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் முன்வைத்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா

அவர் கூறுகையில், ஒன்றிய அரசின் சார்பில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். பொதுவாக இத்தகைய திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவு கிடைக்காததால் அது நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

அதிமுக நிலைமை மாறி விட்டது

மேலும் தமிழக அரசியல் நிலைமை குறித்து பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்த அதிமுகவின் நிலைமை தற்போது மாறிவிட்டதாகவும், இப்போது அந்தக் கட்சி பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் பாஜகவுக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

விசிலடித்துக் கொண்டு வருபவர்களுக்கு

அதேபோல் மாற்று அரசியல் என்ற பெயரில் புதிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார். அதாவது விசிலடித்துக் கொண்டு வருபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்தார். குறிப்பாக சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வரும் நபர்கள் குறித்து பேசும் போது, தமிழகத்தில் அரசியல் போட்டி இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனைகளுக்கிடையே தான் நிலவுகிறது என்றார். இந்த சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறைமுகமாக விஜய்

தவெக தலைவர் விஜய் குறித்து குறிப்பிட்டு பேசும் போது, அவர் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். குறிப்பாக சில சமூக வாக்குகளை பிரித்து, அதிமுகவிற்கு ஆதரவாக மாற்றுவதன் மூலம் பாஜக வெற்றிக்கு உதவி செய்யப்படுகின்றது என்றார். இதே போல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் கூறினார்.

மக்கள் நலனுக்காக செயல்படுவார்கள்

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர் தேர்வு என்பது கட்சி அடிப்படையில் நடைபெறும் ஒரு முறையான செயல்முறை என்றும் அவர் விளக்கினார். தொகுதியில் பணியாற்றும் தொண்டர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றார். எல்.சுந்தரராஜன் போன்றவர்கள் மக்கள் நலனுக்காக செயல்படுவார்கள் என்றும், அவர் சம்பளத்தையும் கட்சிக்கே வழங்குவார் என்றும் கூறினார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க திருமா பரப்புரை

இறுதியாக, தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியலை நிலைநிறுத்தவும், மதவாத சக்திகளை எதிர்க்கவும் திருவொற்றியூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தரராஜனுக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.