நவராத்திரி பண்டிகையின் நிறைவான பத்தாவது நாளில் வரும் தசமி திதியில் கொண்டாடப்படுவது தான் விஜயதசமி. இது அம்பிகை, தீமைகளை வெற்றிக் கொண்ட நாளாக கருதப்படுகிறது. ராமாயணத்தில், ஸ்ரீராமன், ராவணனை வதம் செய்து வெற்றி பெற்றதும் இதே விஜயதசமி நாளில் தான் என சொல்லப்படுகிறது.
விஜயதசமி விழா :
நவராத்திரி விழாவின் ஒன்பது நாள் வழிபாட்டின் நிறைவாக பத்தாவது நாளில் கொண்டாடப்படுவது தான் விஜயதசமி. அம்பிகையை, அசுரர்களை வதம் செய்து, வெற்றி திருக்கோலத்துடன் காட்சி தந்த திருநாளாக விஜயதசமி கருதப்படுகிறது. அதனால் இந்த நாளில் துவங்கப்படும் செயல்கள் வெற்றியை தரும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக தான் பலரும் புதிய தொழில் துவங்குவது, குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் கற்க துவங்குவது போன்றவற்றை செய்வது உண்டு. நவராத்திரியை தொடர்ந்து வரும் பத்தாவது நாளை தமிழகத்தில் விஜயதசமி என்றும், வட மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுவது வழக்கம்.
விஜயதசமி அல்லது தசரா கொண்டாடுவது ஏன்?
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்ற மனிதனின் மூன்று அடிப்படை குணங்களின்படி வகைப்படுத்தப்படுகின்றன. முதல் மூன்று நாட்களும், தமஸ் எனப்படும் துர்கை மற்றும் காளி போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களைக் குறிக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் ரஜஸ் குணத்துக்குரிய லட்சுமியுடன் தொடர்புடையவை. கடைசி மூன்று நாட்கள் சத்வ குணத்துக்குரிய சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது அறிவு மற்றும் ஞானமடைதலுடன் தொடர்புடையது. மனிதன் வெல்ல வேண்டியதாக இந்த மூன்று குணங்களும் சொல்லப்படுகின்றன. இந்த மூன்று குணங்களையும் வென்று விட்டதையே நவராத்திரியின் நிறைவான விஜயதசமியில் கொண்டாடுகிறோம். இந்த மூன்று குணங்களையும் வென்று, தெய்வீக நிலை என்னும் உயர்ந்த நிலையை மனிதன் அடைய வேண்டும் என்பதையே நவராத்திரி மற்றும் விஜயதசமி திருநாள் காட்டுகிறது. விஜயதசமி, வெற்றியின் திருநாள். இது நம் வாழ்வில் முக்கியமான எல்லாவற்றிற்கும் மரியாதை மற்றும் நன்றியுடன் இருப்பதனால், காரியசித்திக்கும் வெற்றிக்கும் வழிவகுக்கிறது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகிறது என ஈஷா யோகா மைய சத்குரு குறிப்பிடுகிறார்.
விஜயதசமி 2026 வழிபாட்டு நேரம் :
விஜயதசமி 2026 தேதி அக்டோபர் 20 செவ்வாய் தசமி திதி துவங்கும் நேரம் அக்டோபர் 20 காலை 10.39 தசமி திதி நிறைவு நேரம் அக்டோபர் 21 காலை 11.50 வழிபாட்டு நேரம் காலை 10.45 – 11.45,
பகல் 01.35 – 02.55,மாலை 04.35 – 05.35 அல்லது 06.00 மணிக்கு மேல்
விஜயதசமி வழிபாட்டு முறை :
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நாம் செய்த வழிபாட்டின் பயன் நமக்கு கிடைக்க வேண்டும். வாழ்வில் வெற்றிகளை பெற்று, நிறைவான வாழ்க்கையை வாழ அருள் செய்ய வேண்டும் என அம்பிகையை வேண்டிக் கொண்டு, நவராத்திரி வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும். இந்த நாளில் நம்முடைய வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் வாகனங்கள், மற்ற கருவிகள் ஆகிய பொருட்களை கருவி சுத்தம் செய்து, அவற்றிற்கு பூக்கள் சூட்டி அலங்கரித்து, பூஜை செய்து வழிபட வேண்டும். அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
புதிய கலைகளை கற்க துவங்குபவர்கள் இந்த நாளில் துவங்கலாம். காலையில் வழிபாட்டிற்கான நேரமாக சொல்லப்பட்டுள்ள நேரத்தில் குழந்தைகளுக்கான வித்யாரம்பத்தை துவங்கி வைக்கலாம். வித்யாரம்பம் வீட்டில் பெரியவர்களை வைத்தோ அல்லது கோவில் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றோ செய்யலாம். இந்த நாளில் அம்பிகைக்குரிய திருநாமங்களை சொல்லி வழிபட வேண்டும்.
