மதுரை: ”விஜய் செய்தியாளர்களை சந்தித்தால் அதுவே மிகப்பெரிய சாதனை,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிண்டலாக கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: செங்கோட்டையன் செல்லாக்காசு. அவரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் த.வெ.க.,வுக்கு சென்று இருக்கிறார். துாத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது செங்கோட்டையன் எங்களுடன் இருந்தார். அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார். மாங்கா பறித்து கொண்டிருந்தாரா. திருவிழாவில் காணாமல் போன ஆள் பற்றி பேச வேண்டாம்.
முதல்வருக்கு பயம் வந்து விட்டது. அ.தி.மு.க., – பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகுவதை பார்த்து அவரால் சகித்து கொள்ள முடியவில்லை. அவரைவிட சிறந்த நிர்வாகி பழனிசாமி. கருத்து கணிப்புகளை பார்த்து முதல்வருக்கு பதற்றம் வந்துவிட்டது. தி.மு.க., கூட்டணி கட்சிகளை அடிமையாக வைத்துள்ளது. கூட்டணியில் கொள்கை முரண்பாடு இருப்பதால் தி.மு.க., ‘சீட்’ ஒதுக்குவதில் குழப்பம் இருக்கிறது. தேர்தல் வருவதால் மத்திய அரசை தமிழக அரசு குறை கூறுகிறது.
மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் 69 பேரில் ஒருவர் கூட யோக்கியன் இல்லை. சல்லடை போட்டு முதல்வர் தேடிக் கொண்டிருக்கிறார். தாமதத்திற்கு அதுதான் காரணம். மத்திய பட்ஜெட் என்பது முன்னோட்டம் தான்; இன்னும் நிறைய திட்டங்கள் வர இருக்கின்றன. சிலருக்கு கசக்கும்; சிலருக்கு இனிக்கும். அது நெல்லிக்கனி போல். 9வது முறையாக ஒரு பெண் பட்ஜெட் சமர்ப்பித்திருப்பது நமக்கு பெருமை என்றார்.
