தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவரது கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெரம்பூர் தொகுதியில் செய்யும் தேர்தல் பிரச்சாரத்தால் தவெக தலைவர் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டுமல்லாமல் வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்ட தவெகவினர், கட்சியினுடைய பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே என சுருக்கமாக பெயரிட்டு தான் தற்போது வரை தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் வேணுகோபால் என்பவர், தனது கட்சியை டி.வி.கே என குறிப்பிட்டு கேமரா சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இம்முறை அந்த கூட்டணியில் இருந்து விலகி பல்வேறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். தமிழக வாழ்வுரிமை கூட்டணி என்று பெயரிடப்பட்ட அந்த கூட்டணிக்கு, தேர்தல் ஆணையம் கேமரா சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்த சூழலில், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் த.வா.க வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட த.வா.கவினர், டி.வி.கே என வைத்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டி.வி.கே கட்சிக்கு கேமரா சின்னத்தில் வாக்குகள் தாருங்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிலும், டி.வி.கே கட்சிக்கு விசில் சின்னத்தில் வாக்குகள் தாருங்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் ஆட்டோ பிரச்சாரங்கள் நடைபெறுவதால் வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், தங்களுடைய கட்சியினுடைய பெயரை தவறாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பயன்படுத்துகிறார்கள் என தவெகவினரும், இந்த பெயரை தமிழக வெற்றிக் கழகத்தினர் பயன்படுத்தக் கூடாது என த.வா.கவினரும் மாறி மாறி குற்றம்சாட்டி பெரம்பூர் தேர்தல் நடத்தை அலுவலர் கீதாவிடம் புகார் அளித்துள்ளனர்.
