விஜய்க்கு எதிரான பாமக வேட்பாளர்?- இறுதி பட்டியலை வெளியிட்ட அன்புமணி

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. அதேபோல் தேர்தல் பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிமுக-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணியின் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மூன்று தொகுதிகளுக்கு ஏற்கனவே பாமக வேட்பாளர்களை அறிவித்திருந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், செஞ்சி தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், அம்பத்தூரில் சேகர் என அன்புமணி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கும் தற்போது வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. அதன்படி பெரம்பூர்-திலகபாமா, தர்மபுரி-சௌமியா அன்புமணி, விருதாச்சலம்-தமிழரசி ஆதிமூலம், சேலம் மேற்கு-கார்த்தி, பென்னாகரம்-செல்வம், போளூர்-பாஸ்கரன், திருப்போரூர்-பாலு, ஜெயங்கொண்டான்-வைத்தி, சேலம் வடக்கு-சதாசிவம், விக்கிரவாண்டி-சிவகுமார், சோளிங்கர்-சரவணன், மயிலாடுதுறை-பழனிச்சாமி, உத்திரமேரூர்-மகேஷ் குமார், ரிசிவந்தியம்-செழியன், காட்டுமன்னார்கோவில்-அன்பு ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Source link