தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் தனது வேட்புமனுவை இன்று (02.04.2026) தாக்கல் செய்தார். இதையடுத்து திருச்சி கிழக்கில் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் விஜய் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் திமுக வேட்பாளர் நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்துள்ளார். விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவாறே பரப்புரை மேற்கொண்ட திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் , அந்த பகுதியில் சென்ற மக்களிடமும் வாகனத்தில் சென்றவர்களிடமும் திமுகவின் நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டார்.
