விஜய்யை அவமதிக்கும் நோக்கம் இல்லை – நட்டி விளக்கம்

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள படம் ‘டிஎன் 2026’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது படத்தில் நட்டியின் கதாபாத்திரம் தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிப்பது போலவே இருந்தது. இதனை தவெக தொண்டர்கள் கண்டித்து படக்குழுவினரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. 

இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் நட்டி நட்ராஜ் பேசுகையில், “இயக்குநர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குநர். இன்னும் சில ஆண்டுகளில் பான் இந்தியா இயக்குனர்களில் இவரது பெயர் இருக்கும். இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன். தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம்,  விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.

இயக்குநர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது. எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. அந்த நடிகரின் லுக் வருகிறதென்றால் அது ஒரு போர்ஷன் மட்டும் தான். அதைத் தவிர்த்து ஐந்து முதல் ஆறு வித்தியாசமான கெட்டப்புகளில் எடுத்திருக்கிறோம். உமாபதி சொன்னது போல் அந்த நடிகர் சிங்கம். அவரை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.  

Source link