விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?; தேர்தல் அதிகாரி பரபரப்பு விளக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், நாளை (28-03-26) பெரம்பூர் தொகுதியில் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், நாளை காலை 10 மணியளவில் எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் தவெக தரப்பில் கடந்த 25ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த சூழலில், தவெக கேட்ட எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் பகுதி என்பது நெருக்கடியான இடம் என்பதாலும், அந்த இடத்தில் 3,000 பேர் கூட முடியாது என கூறி விஜய்யின் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் மாற்று இடம் கோரி விண்ணப்பிக்க தவெகவுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன் என பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதாவது தவெக கொடுத்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முல்லை நகர் சந்திப்பில் சிறிய அளவிலான தெருமுனை பரப்புரை நடத்துவதற்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்றும், மனுவில் குறிப்பிட்டது போல அந்த இடத்தில் 3,000 பேர் கலந்துகொள்ளக்கூடிய இடமாக இல்லை, எனவே முல்லை நகர் சந்திப்பில் பரப்புரை நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். வேறு இடத்தை தேர்வு செய்து அனுமதி கேட்டால் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Source link