சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில், த.வெ.க., தலைவர் விஜய், மீண்டும் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில், 6 கோடி ரூபாய் சொத்து உயர்ந்துள்ளது.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும், த.வெ.க., தலைவர் விஜய், கடந்த 30ம் தேதி, பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பிரமாண பத்திரத்தில், தனக்கு 52 வயதாவதாகவும், தன் மீது வழக்கு ஏதும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவுக்கான, பிரமாண பத்திரத்தில், தனக்கு 51 வயதாவதாகவும், தன் மீது மதுரை மற்றும் சென்னை பெரம்பூரில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இரண்டு தொகுதிகளிலும் சமர்ப்பித்த, பிரமாண பத்திரத்தில், முரண்பாடுகள் இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விஜய் தரப்பில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில், நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே தெரிவித்த சொத்து மதிப்பை விட, அவரின் சொத்து மதிப்பு 6 கோடி ரூபாய் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. பழைய பிரமாண பத்திரத்தில், விஜயின் சொத் து மதிப்பு, 642 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, அந்த மதிப்பு, 648 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 6 கோடி ரூபாய் மதிப்பிலான டாடா கேரவன் வாகனம் ஒன்றை, அசையும் சொத்தாக கணக்கில் காண்பித்துள்ளார். பெரம்பூரில் தாக்கல் செய்த கூடுதல் பிரமாண பத்திரத்தில், வயது 51 என திருத்தம் செய்ததோடு, பெரம்பூர் மற்றும் மதுரை வழக்குகளை இணைத்துள் ளார்.
