வைரலான காட்சிகள் – கிளம்பிய சர்ச்சை
காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழல்கிறது? என்பதற்கு த.வெ.க. தலைவர் விஜய், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் மீது அளித்துள்ள புகாரே ஒரு எடுத்துக்காட்டு. இந்த சம்பவம் வெறும் ஒரு புகாராக மட்டும் இல்லாமல், பல கேள்விகளை எழுப்புகிறது. அதன் முழு பின்னணியை தெரிந்துகொள்வோம்.
‘அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம்’ என்று பொது வெளியில் பேசினார் ஒரு ரசிகை. ‘எனக்கு என் புருஷனை விட விஜய்தான் பிடிக்கும்’ என்பதும் ஒரு த.வெ.க. அம்மணி கூறியதே. ‘குப்பை கூட்டுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கா’ என்று விஜயின் தனிப்பட்ட விவகாரத்தை ஆதரித்துப் பேசினார் ஒரு மாணவி. ‘நான் இருபத்தஞ்சு வருஷமா விஜயை காதலிக்கிறேன்; அது அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்குக் கூட தெரியும்’ என்று திருவாய் மலர்ந்தார் மற்றொரு பெண். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தப் பேச்சுகளை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். அப்படி பேசும் போது வெளிப்பட்ட பெண்களின் முகபாவனைகளும், அலட்சியத் தொனியில் அமைந்த அவர்களின் உச்சரிப்புகளும் பலருக்கு பொழுதுபோக்காக மாறின.
எங்கே போகிறது இந்த ரசிகைத் தீவிரம்?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை சர்வ சாதாரணமாக மீறிய இந்த விஜய் அபிமானிகள் கேலிக்குரியவர்களாக மாறிய நிலையில், என்ன கொடுமைடா இது? என்று பல்வேறு தரப்பினரும் புலம்பினர். தங்களது எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பின்னூட்டங்களாக பதிவு செய்தனர். இங்கே ஒரு கேள்வி – அப்படி பேசிய அந்த சகோதரிகளின் குடும்பங்கள் உள்ளுக்குள் அனுபவித்த வேதனையை, அவர்களை இந்த சமூகம் பார்த்த விதத்தை யார் முழுமையாக விளக்க முடியும்? இதற்கு விஜய் தலைமையிலான த.வெ.க. தரப்பு மௌனம் காத்த நிலையில், அதை ரசித்ததா? ஏற்றுக்கொண்டதா? அல்லது இதுவே தங்களது கட்சியின் பலம் என பெருமிதம் கொண்டதா? எதுவும் தெளிவாகப் புரியவில்லை.
பொன்ராஜ்: தனித்துவமான அடையாளம்
தற்போது அரசியல் விமர்சகர் பொன்ராஜ் விஷயத்துக்கு வருவோம். அவர் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக அறியப்பட்டவர். அவர் போகாத ஊரில்லை; செல்லாத நாடில்லை. ஜார்ஜ் புஷ், நெல்சன் மண்டேலா தொடங்கி கலைஞர் வரை அவர் சந்திக்காத.. பழகாத தலைவர்கள் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் நக்கீரன் இதழில் வெளியான ‘ஆகலாம் அப்துல் கலாம்’ தொடரின் போது, அவருடன் இணைந்து பயணித்த அனுபவத்தின் மூலம் அவருடைய இயல்பை அறிந்துகொள்ள முடிந்தது. ‘வேலை தேடுபவர்களாக அல்ல, வேலை வழங்குபவர்கள் (Job Creators) ஆக இளைஞர்கள் மாற வேண்டும்’ என்ற கலாமின் சிந்தனையை தொடர்ந்து சொல்லி வந்தார். அவரது பேச்சும் செயல்களும் இளைஞர்களின் முன்னேற்றத்தைச் சுற்றியே இருந்தன. ஏனெனில், இந்தியா உலக அளவில் முன்னணி நாடாக உயர வேண்டும் என்றால், இளைஞர்கள் தொடர்ந்து சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும்; அதற்காக அவர்களைத் தூண்ட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.
தமிழ்நாடு எப்படி வளர வேண்டும் என்ற தெளிவான நீண்டகால திட்டத்தைக் (Vision 2020) கொண்டு, அரசு நிர்வாகத்திலும், 15 மாநிலங்களில் சட்டப்பேரவை தொடர்பான கலந்துரையாடல்களிலும் தனது கருத்துகளைப் பகிர்ந்து வந்தார். குறுகிய கால அரசியல் அல்ல, நீண்டகால வளர்ச்சியே முக்கியம் என்ற சிந்தனையும் அவரிடமிருந்து வெளிப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் (IAS) ஆகியோருக்கு புதுமைச் சிந்தனை (Innovation), தலைமைத்துவம், திறன் மேம்பாடு போன்றவற்றில் பயிற்சிகள் அளித்து, “புதியதாக சிந்திக்க வேண்டும்” என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
விஜய் – பொன்ராஜ்: ஒரு சந்திப்பின் தொடக்கம்
பயணங்களின்போது எப்போது பார்த்தாலும் கனவு, இலக்கு, வழிகாட்டல் என்று தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருக்க, “சார்… டாபிக் மாற்றுவோமே…” என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். குறித்து பேச்சு திரும்பியது. அதிலிருந்து நடிகர் விஜய் பற்றிய பேச்சு தொடங்கியது. ‘விஜய்யைப் பற்றி நான் சொல்லுவதற்கு பதிலாக தாமுவிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்…” என்றதையடுத்து நடிகர் தாமுவை தொடர்புகொண்டோம். என்னை வீட்டுக்கு அழைத்தார் விஜய். மாணவர்களிடம் கலாம் சாரின் இளைஞர்களுக்கான பத்து கட்டளைகளை ஒவ்வொரு மேடையிலும் சொல்லுவேன். நான் நடத்தும் அந்த மூன்றரை மணி நேர நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கென்றே எனக்கு சிறப்பு பயிற்சி அளித்திருக்கிறார் பொன்ராஜ். உங்கள் ரசிகர்களெல்லாம் இளைஞர்கள். ஒன்றரை லட்சம் ரசிகர்களை வரவழைத்து பெரிய கூட்டம் நடத்தினால், இந்த கருத்துகளை அவர்களிடம் கொண்டு செல்லலாம் என்று சொன்னேன்.
அதற்கு விஜய், ‘முதலில் பொன்ராஜ் சாரை நான் பார்க்க வேண்டும். நான் வீட்டுக்கு அழைத்தால் வருவாரா?’ என்று கேட்டார். பொன்ராஜ் சாரும், ‘நல்ல விஷயம்தானே, உடனே பார்க்கலாம்’ என்றார். அந்தச் சந்திப்பின்போது நானும், விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ஆனந்தும் உடன் இருந்தோம். ‘ஒவ்வொரு சினிமா ரசிகனும் கலாம் சாரின் மாணவனாக விழிப்புணர்வு பெறுவது தமிழகத்தில் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்’ என்று சொல்லி விஜய்யிடம் மணிக்கணக்கில் பேசினார் பொன்ராஜ். விஜய்யும் கவனத்துடன் கேட்டார். தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால், விஜய்யால் கலாம் சாரை சந்திக்க முடியவில்லை என்றார். அப்போது ஜெயலலிதா ஆட்சி காலம். தலைவா திரைப்படத்தின் டைட்டிலில் இருந்த ‘Time to Lead’ என்ற வாசகம் பெரிதாகப் பேசப்பட்டது. அந்த படம் வெளியாவதில் பெரும் சிக்கல்கள் எழுந்ததால், விஜய் கடும் அழுத்தத்துக்கு ஆளானார். அந்த காலகட்டத்தில், தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் விருப்பப்படி அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் விஜய்க்கு இருந்தது. பொன்ராஜை சந்தித்தபோது தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அதற்கு பொன்ராஜ், ‘அரசியலில் இறங்குவதற்கு இது சரியான நேரம் அல்ல. குறைந்தது பத்து ஆண்டுகள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்த பிறகே அரசியலுக்கு வர வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடுமையான எதிர்வினை – ‘ரவுத்திரம் கொள்’
ஃப்ளாஷ் பேக்கிலிருந்து நடப்புக்கு வருவோம். விஜய் ரசிகர்கள் மனதில் புதுமைச் சிந்தனையை விதைத்து, தலைமைத்துவ நிலைக்கு அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நாட்டு நலன் சார்ந்த கனவில் இருந்த பொன்ராஜுக்கு, அதற்கு முற்றிலும் மாறான ரசிகைகளின் வைரலான ஆபாச பேச்சு – “ரவுத்திரம் கொள்” (தவறுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கோபம்) என்ற உணர்வை அவருக்குள் தூண்டியுள்ளது.
இழிநிலைக்கு இறங்கிய விஜய் – பொன்ராஜ் சாடல்
பொன்ராஜ் கூறுவது: “நான் சொன்ன வார்த்தைகள் அநாகரிகமாகப் பேசியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்பதாகும். ஆனால், புகார் அளித்த விஜய் இதனைத் திட்டமிட்டே அரசியலாக்குகிறார். த.வெ.கவைச் சீண்டுவதாகக் கருதி, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயல், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப்போவது உறுதி என்கிறார். முன்பு தனக்கு ஆசானாக இருந்து, தனது ரசிகர்களையும் வழிநடத்தவிருந்த பொன்ராஜை ஆதாய சூதாடி என்று விமர்சிக்கும் விஜய்யிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார் பொன்ராஜ்.
“நான் பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன். உங்களைப் போல வீட்டிலும், சினிமாவிலும், உங்கள் கட்சியிலும் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்தப் பெண்ணையும் – அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. உங்கள் கட்சி பெண்களுக்கு, உங்கள் கட்சி ஆட்களால் இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளான பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள். நூற்றுக்கணக்கான மிரட்டல் கால், சமூக வலைத்தளங்களில், வாட்ஸ்அப்பில் என்னையும் என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்காகத்தான் ‘விர்ச்சுவல் வாரியர்கள்’ உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு இழிநிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்!” என்று சாடுகிறார். தவறானவர்களைத் திருத்த வேண்டும் என்றால் தலையில் குட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொன்ராஜ் உறுதியாக உள்ளார். பூனைக்கு மணி கட்டப்பட்டுவிட்டது; இனிமேலாவது சினிமா மோகத்தில் பிறரை முகம் சுளிக்கவைக்கும் ரசிகைகளின் பேச்சு ஓய்ந்தால் நல்லதே.
பெட்டிச் செய்தி
“விஜய் மன்னிப்பு கேட்கட்டும்… நானும் தயார்தான்!” – பொன்ராஜ்
அந்த வகையான விஜய் ரசிகைகள் குறித்த ஆதங்கத்திலேயே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறிய பொன்ராஜ், நமக்கு அளித்த பேட்டியில், “அப்படி பேசியிருக்கக்கூடாது” என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் “பெண்கள் தொடர்பாக விஜய் கேட்க வேண்டிய மன்னிப்புகள் பல உள்ளன. அவர் மன்னிப்பு கேட்டால் நானும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். என்னை ஆதாய சூதாடி என்று விமர்சிக்கும் விஜய் நேருக்கு நேர் விவாதத்திற்கு வரத் தயாரா? யார் உண்மையில் ஆதாய சூதாடி என்பது அப்போது தெரிந்துவிடும் என்று சவால் விட்டவர் குடும்பத்திலிருந்து அரசியல் வரை தொடர்ந்து பெண் வாக்காளர்களிடையே கெட்ட பெயர் சம்பாதித்து வரும் விஜய்யிடம் நான் பெண்களை மதிப்பவன் என்று காட்டிக்கொள்ளவே, என் மீது புகாரளிப்பதன் மூலம் அவர்களைக் கவர்ந்துவிடலாம் என்று அரசியல் கணக்கு போட்டுள்ளார். இனிமேல் இந்த பொன்ராஜுக்கும் விஜய்க்கும்தான் போட்டி” என்று சிரித்தார்.
