'விடியல் தருவோம்' என்று இருளில் தள்ளிய தி.மு.க. அரசு: பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் காட்டம்

திருப்பூர்: ”கடந்த, 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாமல், தி.மு.க. அரசு தங்களை ஏமாற்றிவிட்டது” என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: ‘விடியல் தருவேன்’ எனக்கூறி ஆட்சியில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான ‘பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம்’ என்பது இதுவரை நிறைவேற்றவில்லை. தற்போது, 5 ஆண்டுகால ஆட்சி முடியும் தருவாயிலும், 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

தி.மு.க. வாக்குறுதிப்படி, பணிநிரந்தரம் செய்திருந்தால், காலமுறை ஊதியத்தின் கீழ், 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைத்திருக்கும். ஆனால், வெறும் 5,000 ரூபாயை மட்டும் உயர்த்தி, தற்போது, 15 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்திலேயே ஆசிரியர்களை தவிக்கவிட்டுள்ளது. போனஸ், மருத்துவக் காப்பீடு, பி.எப், பணிக்கொடை, பென்சன் போன்ற எந்தவொரு அரசு சலுகைகளும் கிடைக்காமல் ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த, 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்குப் பதிலாக, காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிட்டிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது.

கம்ப்யூட்டர் அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு’ என நம்பிக்கை கொடுத்துவிட்டு, எங்களை இருளில் தள்ளியுள்ளது தி.மு.க. அரசு. பகுதி நேர ஆசிரியர்கள் விவகாரத்தில் கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதியையே நிறைவேற்றாத நிலையில், இம்முறை தேர்தலில், பகுதி நேர ஆசிரியர் விவகாரம் தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Source link