விதிமுறை மீறப்படும் 5 சாலைகளில் நடவடிக்கைக்கு போலீஸ் தயார்

புதுடில்லி: சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் அதிகம் மீறப்படும், ஐந்து சாலைகளை அடையாளம் கண்டுள்ள போக்குவரத்து போலீஸ் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி கூறியதாவது:

டில்லி மாநகரில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை அதிகளவில் மீறும், ஐந்து பரபரப்பான சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நரேலாவில் மதுபன் சவுக், ரிதாலா மெட்ரோ ரயில் நிலையம், ஷாபாபாத் டெய்ரி, பட்லி மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சூபியாபாத் சந்திப்பு ஆகிய இடங்களில் கடுமையான சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் அதிகளவில் மீறப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

அபராதம் இந்த ஐந்து சாலைகளையும் தீவிரமாக கண்காணித்து விதிமுறை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 16ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை இந்தப் பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 8,270 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முறையற்றும், தடை செய்யப்பட்ட இடத்திலும் நிறுத்தப்பட்டு இருந்த, 1,000- வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜனவரி மாதத்தில் மட்டும் மாடல் டவுன் ஆசாத்நகர் சவுக்கில், 2,794 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவழிப் பாதையில் வாகனம் ஓட்டுதல், மின்சார -ரிக் ஷாக்கள் முறையற்று நிறுத்தி வைத்தல், நிறுத்தக் கோடு விதிமீறல் மற்றும் சிக்னலில் நிறுத்தாமல் செல்லுதல் இங்கு அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் அசோக் விஹார் ஷாலிமர் பாக் சவுக்கில் ஜனவரி மாதத்தில், 2,037 பேருக்கும், ஜனவரி 16ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை கரோல் பாக் பிகானீர் சவுக்கில், 4,233 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 968 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன.

அதேபோல, கரோல் பாக் மார்க்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்து சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அடையாளம் காணப்பட்டுள்ள சாலைகளில், சிறப்புப் பிரிவினர் நிறுத்தப்படுவர். சாலைப் போக்குவரத்து விதிமுறை மீறலைத் தடுக்கவும், சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் மேலும் கண்காணிப்புக் கேமராக்கள் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link