பட்டுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தாய் – மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 78 வயதான செல்லாச்சி என்பவர் மூளையில் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்புவதற்காக, அவர் தனது மகள் ஃபைரோஸ் பானு (55), மகன் ஹாஜா மொஹிதீன் மற்றும் மருமகள் ஜுபைதா கனி ஆகியோருடன் ஆம்புலன்ஸில் பயணம் செய்தார்.
பட்டுக்கோட்டை அருகே கல்லிக்காடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஆம்புலன்ஸுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் செல்லாச்சி மற்றும் அவரது மகள் ஃபைரோஸ் பானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹாஜா மொஹிதீன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருமகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் தஞ்சை மாவட்ட மைன்ஸ் ஏடி பரமேஸ்வரியும், பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமிநாதனும் பார்ட்னராக இருந்து மாவட்டம் முழுவதும் தவிடு ஏற்றிச் செல்கிறோம் என்ற பெயரில் மணல் அள்ளும் இவர்களுக்கு சொந்தமான டிப்பர் லாரி நேற்று விபத்தை ஏற்படுத்தி இருவர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளது. எனவே காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
