பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அபிஷேக் பச்சன். இவர் கடந்த 2007 ஆண்டு, பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். மகிழ்ச்சியாக இருந்து வந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகச் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இருந்த போதிலும் அவர்கள் இருவரும், இது குறித்து எந்த விதப் பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனிடையே, திரை வட்டாரத்தில் இந்த தகவல் கட்டு தீ போலப் பரவியது. இந்த சமயத்தில், இவர்கள் மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதுவரை இதற்கு எந்த வித கருத்தும் தெரிவிக்காத அபிஷேக் பச்சன் தன் மீதான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அதாவது, “விமர்சனம் என்றாலே நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அது நிச்சயம் நம்மைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களாக இருக்கக் கூடும் என்று நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால், அது தவறு. கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்களது நேரத்தையும், பணத்தையும் செலவிட்டுப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு நம்மை விமர்சிக்க உரிமை உண்டு. அந்த விமர்சனங்களை நாம் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும். விமர்சகர்கள் நம் எதிரிகள் அல்ல” என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
