லெஜண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி லெஜண்ட் சரவணன் அதில் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றார். தற்பொழுது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் லீடர் படம் மூலம் களத்தில் குதித்திருக்கும் லெஜண்ட் சரவணன் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா, இல்லையா?
தூத்துக்குடியில் கார் மெக்கானிக் ஆக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் லெஜன்ட் சரவணன் தன் மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அந்தப் பகுதி துறைமுகத்தில் தாதாவாக இருந்து கொண்டு பல மர்ம கண்டைனர்களை கப்பலில் இருந்து இறக்கி மாஃபியா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாகுபலி பிரபாகரை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கு இடையே வில்லன் சந்தோஷ் பிரதாப் மற்றும் பாகுபலி பிரபாகர் ஆகியோர் சதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தை அழிக்க நாச வேலையில் ஈடுபடுகின்றனர். எஸ் பி ஆக இருக்கும் ஷாமும் இன்ஸ்பெக்டராக வரும் ஆண்ட்ரியாவும் இந்த கேசை விசாரிக்கின்றனர். இதற்கிடையே அந்த கேசில் வாலன்ட்டிரியாக வந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் லெஜண்ட் சரவணன். அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும்? உண்மையில் லெஜண்ட் சரவணன் யார்? அவர் பின்னணி என்ன? அவர் இந்த நாச வேலையை தடுத்தாரா, இல்லையா? என்பதே லீடர் படத்தின் மீதி கதை.
ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களுடன் நிறைந்திருக்கும் ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த லீடர் படத்தை மிக மிக புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் கூடிய ஆக்சன் திரைப்படமாகவும் அதை ரசிக்கும்படியும் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி படத்தையும் வெற்றி பெற செய்து இருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி இல்லாமல் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் படம் நகர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் அமைந்திருக்கிறது. ஒரு பக்கம் ஆக்ஷன் கமர்சியல் படங்களுக்கு என்ன தேவையோ அந்த அளவு ஆக்ஷனை கலந்து, அதே போல் குடும்ப செண்டிமெண்ட், காதல் காட்சிகள், கலகலப்பான காட்சிகள் என அனைத்திற்கும் சரியான முறையில் கலவையாக கலந்து அதே சமயம் வேகத்தடைகளும் இன்றி விறுவிறுப்பாகவும் அமைந்திருக்கிறது.
லெஜண்ட் சரவணன் பார்த்து பார்த்து இந்த கதையை தேர்வு செய்திருக்கிறார், அதற்கு நல்ல பலன் கிடைத்து தனக்கு வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த படம் மூலம் பதிலடி கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். குறிப்பாக கதை கருவில் பல்வேறு லேயர்கள் இருப்பது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. அதை சரிவர கலவையில் பல்வேறு திருப்புமுனைகளுக்குள் உட்புகுத்தி அதற்கேற்றார் போல் பல்வேறு ட்விஸ்டுகள் நிறைந்த திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களை கைத்தட்டல்களால் திரையரங்கை அதிர செய்து இருக்கிறார். இருந்தும் படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் மெதுவாக செலவது போல் இருந்தாலும் அவை பெரும்பாலும் படத்திற்கு பாதகமாக அமையவில்லை.
லெஜண்ட் சரவணன் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான முறையில் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து மாஸ் காட்டியிருக்கிறார். ஒரு பக்கம் தந்தை பாசம் இன்னொரு பக்கம் உளவாளி என இரண்டு பரிணாமங்களை சிறப்பான முறையில் கையாண்டு ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். நடிப்பிலும் முகபாவனைகளிலும் இன்னமும் கூட முதிர்ச்சி தேவைப்படுகிறது. தன் முந்தைய படத்தை விட இதில் சிறப்பாகவே செய்து இருக்கிறார். இருந்தாலும் இன்னமும் முன்னேற்றம் தேவை. நாயகி ராஜ்புத் பாயல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். படத்தில் வழக்கமான நாயகியாக இல்லாமல் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார். லெஜண்ட் சரவணன் மகளாக நடித்திருக்கும் சிறுமி லியோ படம் மூலம் அறிமுகமானாலும் இதில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பும் லெஜண்ட் சரவணனுடன் இவருக்குமான கெமிஸ்ட்ரியும் சிறப்பாக ஒர்க்அவுட் ஆகி பார்ப்பவர்களை கண்ணீர் விட செய்திருக்கிறது.
லெஜண்ட் சரவணன் முதலாளியாக வரும் விடிவி கணேஷ் சில காட்சிகளே வந்தாலும் கவர்கிறார். பாதிரியாராக வரும் ஜார்ஜ் மரியான் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அமிர்தா ஐயர் லால் மற்றும் போலீசாக வரும் ஷாம் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். இவர்களின் பங்களிப்பு படத்திற்கு சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. வில்லன்களாக வரும் பாகுபலி பிரபாகர் மற்றும் சந்தோஷ் பிரதாப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக சந்தோஷ் பிரதாப் மூன்று வேடங்களில் வந்து கலக்கி இருக்கிறார். மற்றபடி உடனடித்து அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
ஜிப்ரான் இசையில் முத்தைத்தரு முருகப் பாடலும் பின்னணி இசையும் மிரட்டல். குறிப்பாக இவரது பின்னணி இசை படத்திற்கு மிக மிக சிறப்பாக அமைந்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. அதுவே இந்த படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக மாறி படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. எஸ் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். ஒரு பிரம்மாண்டப் படத்திற்கு எந்த அளவு ஒளிப்பதிவு தேவையோ அதை சிறப்பான முறையில் நேர்த்தியான முறையில் கொடுத்து படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அதேபோல ஆக்ஷன் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ்ஸை கூட்டி இருக்கிறது.
லெஜண்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிறப்பான விறுவிறுப்பான தரமான மாஸ் படமாக இந்த லீடர் படத்தை கொடுத்து மாஸ் காட்டி இருக்கிறார் லெஜண்ட் சரவணன். பெரிய மாஸ் ஹீரோ படங்கள் சமீபகாலமாக சரியாக அமையாத இக்காலகட்டத்தில் அது போல் எந்த குறைகளும் இல்லாமல் சிறப்பான முறையில் நேர்த்தியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்கள் ரசிக்கும் படியும் இந்த படத்தை கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து வெற்றி பெற செய்திருக்கிறது.
லீடர் – எ ஃபர்பெக்ட் ஸ்பை த்ரில்லர்!
