வாஷிங்டன்: ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியும் விமானப்படை தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார்.
தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பலகட்ட எச்சரிக்கைகளுக்குப் பின், மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த 28ம் தேதி தாக்குதலை துவங்கின. ஒப்புதல் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, 86, கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. 10வது நாளாக போர் நேற்றும் தொடர்ந்தது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், ஈரான் அதை கண்டுகொள்ளவில்லை. மேலும், ஈரானின் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் தன் பங்கு இருக்க வேண்டும் என்றும், எங்களிடம் ஒப்புதல் பெறாவிட்டால், அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், போரில் கொல்லப்பட்ட முன்னாள் ஆட்சியாளர் கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி, அடுத்த ஆட்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இஸ்ரேலும், ஈரானுக்கு புதிதாக யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர்களையும் கொல்வோம் என்று எச்சரித்து இருந்தது. இந்நிலையில், புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து உள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் இது குறித்து ஈரானிடம் இருந்து தகவலை எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
