புதுடில்லி: சர்வதேச சந்தையில், ஏ.டி.எப்., எனப்படும் விமான எரிபொருள் விலை 114.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கான ஏ.டி.எப்., விலை 8.50 சதவீதம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் எதிரொலியாக ஏ.டி.எப்., விலை உயர்வு நேற்று இருமடங்கானது.
இதுவரை இல்லாத அளவுக்கு 1,000 லிட்டருக்கு 2.07 லட்சம் ரூபாயாக அது அதிகரித்தது.
விமான எரிபொருள் விலையானது, இருபது ஆண்டுகளுக்கு மேலாக விமான சேவை நிறுவனங்களுடனான புரிந்துணர்வின்படி சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், மேற்காசிய போர் தொடங்கியதற்கு பிறகு, நிலைமைக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயிக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுத்தன.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஏ.டி.எப்., விலை 114. 5 சதவீதம் அதிகரித்தாலும், இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கான விலை 8.50 சதவீதம் மட்டுமே நேற்று உயர்த்தப் பட்டது.
எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு விமான போக்கு வரத்து நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விமான கட்டணங்கள் உயராத வகையிலான இந்த விலை உயர்வை, விமான நிறுவனங்களும் எதிர்க்கவில்லை.
எனினும், வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கான ஏ.டி.எப்., விலை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்பட 2.07 லட்சம் கோடி ரூபாயாகவே உள்ளது.
வாடகை விமான சேவை நிறுவனங்களுக்கும் இந்த விலையேற்றம் பொருந்தும்.
