விமான நிலையங்களில் சரக்குகள் தேக்கம்: தாமத கட்டணம் கூடாது என வலியுறுத்தல்

திருப்பூர்: மேற்காசியாவில் நடந்து வரும் மோதல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்களில் தேக்கமடைந்துள்ள ஏற்றுமதி சரக்குகளுக்கு விதிக்கப்படும் தாமத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஏ.இ.பி.சி., எனப்படும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:

மேற்காசிய மண்டலத்தில் நடைபெற்று வரும் போர் காரணமாக, சர்வதேச விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வழித்தட கட்டுப்பாடுகள், வான்வெளி மூடப்படுவது, விமானங்கள் திசை திருப்பப்படுவது, அட்டவணை மாற்றங்கள் ஆகியவை நிகழ்ந்து வருகின்றன.

இதனால், இந்திய விமான நிலையங்களில் இருந்து ஏற்றுமதி சரக்குகளை சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல் போகிறது.

இந்த தாமதம், ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி தரகர்கள், சரக்கை அனுப்புபவர்கள், ஏர் கார்கோ முகவர்கள் என அனைவரின் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட புறகாரணங்களா ல் ஏற்படுகிறது.

எனவே, அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் விமான நிலையங்களில் சரக்கு அல்லது பயணியரின் பொருட்கள் வைக்கப்பட்டால் விதிக்கப்படும் தாமத கட்டணத்தில் இருந்து ஏற்றுமதி சரக்குகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இது, ஏற்றுமதியாளர்களுக்கு சரியான நிவாரண உதவியாக இருக்கும். சவாலான காலகட்டத்தில், இந்தியாவின் விமான சரக்கு வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை தொடர உதவியாக இருக்கும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link