புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திமுக வடக்கு மா.செ கே.கே.செல்லப்பாண்டின். இவர் மாஜி அமைச்சரான அதிமுக மா.செ விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தநிலையில் திமுக வேட்பாளரின் அண்ணனும் மு.க.அழகிரியின் ஆதரவாளருமான கே.கே.அன்புச்செல்வன் இன்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து அன்புச்செல்வன் ஆதரவாளர்கள் கூறும் போது, ”திமுக மா செ செல்லப்பாண்டியனுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் அன்புச்செல்வன். கட்சியில் செல்வாக்காக இருந்தவர். ஒருங்கிணைந்த குன்றாண்டார் கோவில் ஒன்றியச் செயலாளராகவும், 3 முறை மாவட்ட கவுன்சிலர், மாவட்ட விற்பனைக்குழுத் தலைவராகவும் இருந்தவர். மு.க.அழகிரி ஆதரவாளராக இருந்து அவர் பிரிந்து சென்ற போது 2014 அவருடன் பயணித்தவர். மு.க.அழகிரியை மாவட்டங்கள் தோறும் அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன் பிறகு கட்சியில் ஒரு உறுப்பினராகவே இருந்தார். கட்சியில் எந்த பதவியும் கொடுக்கவில்லை.
இந்தநிலையில் தான் திமுக தலைவரை சந்தித்து மீண்டும் திமுகவில் இணையும் முயற்சியில் இறங்கினார். ஆனால் மாவட்டச் செயலாளர் கடிதம் கேட்டுள்ளனர். கடிதம் கொடுக்காமல் அதற்கான வழிகளை அடைத்துவிட்டனர். அதனால் புதுக்கோட்டை வந்த துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் இணைக்க தி.மு.க மாஜி ஒருவர் முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.அன்புச்செல்வனின் முயற்சிகளை பற்றி அறிந்த அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் விராலிமலை தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான விஜயபாஸ்கர் உடனே அவரை அழைத்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை ஆகவே நீங்கள் அதிமுக வில் இணைந்து விடுங்கள். அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்து நீங்க இணைத்துக் கொள்ள நான் ஏற்பாடு செய்கிறேன் என்றவர். உடனே எடப்பாடி பழனிசாமியிடம் இந்த தகவலை சொல்லி அன்புச்செல்வன் சந்திப்பிற்கான நேரத்தை வாங்கி கொடுத்து சேலத்திற்கு அனுப்பி வைத்தார்.
சேலத்தில் எடப்பாடியாருக்கு விராலிமலையின் அடையாளமாக கருதப்படும் வேல் கொடுத்து தன்னை அ.தி.மு.க வில் இணைத்துக் கொண்டார். விரைவில் கட்சி பொறுப்பு அறிவிக்கப்படும். அடுத்து நாளை முதல் விராலிமலைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளார். இதனால் அவரது தம்பியான திமுக வேட்பாளருக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படலாம்” என்றனர்.
