கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க., விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அங்கே அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விகளுடன் தொகுதிக்குள் வலம் வந்தோம்.
தமிழகத்தின் பருப்பு, எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்யும் வணிக நகரம் என்பதால், மானாவாரி விவசாயம்தான் முக்கியத் தொழில். 35% நாயக்கர், 25% ரெட்டியார், 20% நாடார், 20% இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். ‘விட்டதைப் பிடிக்க வேண்டும்’ என்ற கனவுடன் விருதுநகரில் மகனை களமிறக்கியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கான வியூகங்களையும் வகுத்துவருகிறார்.

எப்படி இருக்கிறது களம்?
தொகுதி தே.மு.தி.க-விற்கு ஒதுக்கப்பட்டதால், தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விஜயபிரபாகரனின் வெற்றிக்காக தி.மு.க-வினர் உழைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும், எம்.பி., மாணிக்கம் தாகூரும் முறுக்கிக்கொண்டு நிற்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கைநழுவிப்போனதும், தந்தை விஜயகாந்த்தின் மறைவு ஏற்படுத்தியுள்ள அனுதாப வாக்குகளும் கைகொடுக்கும் என நினைக்கிறார் விஜய பிரபாகரன். எனவே, பிரசாரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க-வை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டு, தி.மு.க அரசின் சாதனைகள், திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்டு வருகிறார்.
