விருதுநகர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ., ஆக இருந்த தி.மு.க.,வை சேர்ந்த சீனிவாசனுக்கு இந்த முறை சீட் தரப்படவில்லை.
விரு’ சென்டிமென்டோடு பிரேமலதாவுக்கு விருதாச்சலம், மகன் விஜயபிரபாகரனுக்கு விருதுநகர் தொகுதியை எப்படியோ தி.மு.க.,விடம் இருந்து கேட்டு பெற்றுவிட்டது தே.மு.தி.க.
ஆனால், விஜயபிரபாகரனுக்கு விருதுநகரில் போட்டியிட விருப்பமில்லை. காரணம் 2024 விருதுநகர் லோக்சபா தேர்தலில் 4379
பெண்கள் ஆதரவு
ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்., மாணிக்கம் தாகூரிடம் தோற்றார்.கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தொகுதியான அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க.,வின் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., விஜயபிரபாகரன் 61,659 ஓட்டுக்கள் பெற்று 12,278 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை பெற்று முந்தினார்.
தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவரான விஜயகாந்தின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் தான். மேலும் அருப்புக்கோட்டை தொகுதியின் கிராம பகுதிகளிலும் பெண்களின் ஆதரவு விஜயபிரபாகரனுக்கே இருந்தது.
சாதகம்
அதனால் ‘அப்பா சென்டிமென்ட்’ ஆக அருப்புக்கோட்டையில் போட்டியிடலாம் என நினைத்தார். ஆனால் இதை முன்பே அறிந்து உஷார் நிலையில் இருந்த சாத்துார் ராமச்சந்திரன் விருதுநகரை ஒதுக்க வைத்தார்.
விருதுநகரில் நடந்த மாநாட்டிற்கு சரியான பங்களிப்பு தொகை தராததால் சீனிவாசன் மீது தலைமை அதிருப்தியில் இருந்தது. இதை பயன்படுத்தி விருதுநகரை விஜயபிரபாகரனுக்கு கொடுத்துவிட்டனர்.
அ.தி.மு.க., சார்பில் புதுமுகமாக தொழிலதிபர் வி.ஜி.கணேசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.1980க்கு பிறகு இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறவில்லை.
புகைச்சல்
என்னதான் களம் சாதகமாக இருந்தாலும், விஜயபிரபாகரனை தோற்கடித்த மாணிக்கம் தாகூர் பிரசாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி உள்ளது. கூட்டணி குறித்து அவர் பேசிய பேச்சுக்களால் தாகூர் மீது தி.மு.க.,வினர் இன்னமும் கோபத்தில தான் உள்ளனர்.
அதே நேரம் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த விஜயபிரபாகரன், ‘காங்கிரசை நம்பாதீர்கள் நான் விருதுநகரில் பட்டு விட்டேன் அண்ணா,’என்றார். இதனால் விருதுநகரில் தி.மு.க., கூட்டணிக்குள் புகைச்சலுக்கு பஞ்சமில்லாத சூழல் உள்ளது.
இருப்பினும் விஜயபிரபாகரன் மீது நன்மதிப்பு உள்ளது. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்று விட்டதால் பரிதாப ஓட்டுகளே விஜயபிரபாகனை கரையேற்றி விடும் நிலை உள்ளது.
